மூன்றாவது
பத்திரமித்திரன் அறங்கேள்விச்சருக்கம்
--------
224. மந்தர நடுவ தாகக் குலமலை யாறின் வந்த
அந்தரத் தேழு நாடா மாறுமீ ரேழ தாகிச்
சுந்தரத் தடங்க ளாறிற் சூழ்ந்தவே திகைத்து மாகி
நந்திய மதியி னின்ற நாவலந் தீவி னுள்ளால்.
(இ-ள்.) மந்தரம்
- மஹம்மேருபர்வதமானது, நடுவதாக -
மத்தியிலுள்ள தாயிருக்க, குலமலையாறின் - ஆறுகுலகிரிகளினால்,
வந்த - உண்டாகிய, அந்தரத்து -
இடைவெளியில், ஆம் -
இருக்கின்ற, ஏழுநாடு - பரதாதி ஏழுநாடுகளையும், ஆறு ஈரேழதாகி -
பதினான்கு ஆறுகளையுமுடையதாகி, சுந்தரம் - அழகிய, ஆறின் -
ஆறென்னுமெண்ணிக்கையையுடைய, தடங்கள் - பொய்கைகளையும், சூழ்ந்த -
சூழ்ந்திராநின்ற, (மஹாலவண ஸமுத்திரத்தினுடைய),
வேதிகைத்து மாகி - வஜ்ர வேதிகையையுமுடையதாகி,
நந்திய -
நிறைந்திராநின்ற, மதியின் - ஸம்பூர்ணச் சந்திரனைப்போல, நின்ற
- வட்டமாய் நிலைபெற்றிருந்த, நாவலந்தீவினுள் - ஜம்பூத்வீபத்திலே,
எ-று.
ஆறும் என்பதில் உம்மை - அசை.
(1)
225. பாகதுண் டத்தைப் போலும் பரதகண் டத்துச் செம்பொன்
நாகதுண் டத்தை யொக்குந் தருமகண் டத்து நல்ல
போகதுண் டத்தைப் போலுஞ் சீயமா புரத்தைச் சூழ்ந்து
மேகதுண் டங்கள் மேயுஞ் சோலைநா டுண்டு திங்கள்.
(இ-ள்.) திங்கள் - சந்திரனுடைய,
பாகதுண்டத்தைப் போலும் -
பாதிப்பாகத்துக்குச் சமானமாகிய, பரதகண்டத்து - பரதக்ஷேத்திரத்தில்,
செம்பொன் - சிவந்த பொன்னாலாகிய, நாகதுண்டத்தை யொக்கும் -
தேவலோகத்தின் ஒரு பாகத்துக்குச் சமானமாகிய, தருமகண்டத்து -
தர்மகண்டத்திலே, நல்ல - நன்மையாகிய, போகதுண்டத்தைப்
போலும் - உத்தமபோக பூமிக்குச் சமானமாகப்
போகங்களில்
மிகுதியான, சீயமாபுரத்தை - ஸிம்ம மஹாபுரமென்னும் பட்டணத்தை,
சூழ்ந்து - வளைந்து, மேகதுண்டங்கள் - மேகஸமூகங்கள், மேயும் -
வியாபித்து நிற்கும், சோலை - (உன்னதமாகிய) தோப்புகளையுடைய,
நாடு - தேசமானது, உண்டு - உளது, எ-று.
(2) |