பக்கம் எண் :


16மேருமந்தர புராணம்  


 

அருவியை, போன்றன  -  ஒத்திராநின்றன; அந்நகர் - அந்நகரத்தில்,
(மேலே  யாடுகின்ற)  துகிற்கணங்கள்  - துவஜக் கூட்டங்கள்,  மதி -
சந்திரனுடைய, மறு - களங்கத்தை, துடைக்கும் - தடவி நீக்குவனவாம்,
(எனவே   கொடிகள்    சந்திரமண்டலம்    வரை   உயர்ந்துள்ளன
வென்பதாயிற்று.) எ-று.                                    (32)

 33. பளிக்கறைத் தலத்தினூடு பந்தோடாடு பாவையர்
    களிக்கய லனையகண்கள் காமர்பந்தின் மேற்செல்வ
    வளைத்தநற் புருவவில் மலர்க்கணை தொடுத்துவில்
    லிளைப்பநீங்க மாரனம் பிலங்கிலெய்த தொக்குமே.

     (இ-ள்.) பளிக்கறை - ஸ்படிகக்கற்களாலான பாத்திகளையுடைய,
தலத்தினூடு  -  தலத்தில்,  பந்தோடாடு  பாவையர்  -  பந்தாட்டஞ்
செய்கின்ற    சித்ரப்பாவைக்கு   ஒப்பாகிய    மாதர்களின்,   களி -
களிப்பையுடைய,  கயலனைய - கெண்டை மீனுக்கொப்பாகிய, கண்கள்
- கண்களானவை,  காமர் - அழகிய,  பந்தின்மேல் - அப்பந்துகளின்
மேலே,   செல்வ   -   செல்கின்ற   தோற்றமானது,   வளைத்த  -
வளைக்கப்பட்ட, நல் - நன்மையான,புருவவில் - புருவமாகிய வில்லில்,
மலர் - புஷ்பம் போன்ற, கணை - கண்களாகிற அம்பை, தொடுத்து -
சேர்த்து,     வில்லிளைப்ப    -    வில்லிளைக்கும்படி,    நீங்க  -
அவ்வில்லைவிட்டு நீங்கிச் செல்லுமாறு,  மாரன் - மன்மதன், அம்பு -
அவ்வம்பை,  இலக்கில் - குறியில், எய்த - எய்த தன்மையை, ஒக்கும்
- நிகர்க்கும், எ-று.                                       (33)

வேறு.

 34. மாலைசாந் தெண்ணெய் சுண்ணங் கைசெய்வார் மறுகு மைந்தர்
    கோலவார் குழலி னார்போ லிருந்தன வணிசெய் வீதி
    மாலைமா மணியு முத்தும் வீழ்ந்தவை கிடந்த தோற்றம்
    மேலுலாம் வானயாறு வீழ்ந்திவட் கிடந்த தொன்றே.

     (இ-ள்.)  மாலை - பூமாலைகளையும்,  சாந்து - சந்தனத்தையும்,
எண்ணெய்     -     வாசனை    எண்ணெய்களையும்,  சுண்ணம் -
கந்தப்பொடிகளையும்,  கைசெய்வார்  -  கையாற் செய்பவர்களுடைய,
மறுகு - குறுந்தெருவுகள், (அவற்றை யணிகின்ற) மைந்தர் - யௌவன
புருஷரையும், கோலம் - அழகிய,  வார் - நீண்ட, குழலினார்போல் -
குழல்களையுடைய  மாதர்களையும்  போல்,  இருந்தன - இராநின்றன;
வணிசெய்வீதி - வர்த்தகம்  செய்யும்  பெருங் கடைவீதிகளில், மாலை
மாமணியும் -  சிறந்த  இரத்தினமாலைகளும்,  முத்தும் - முத்துமாலை
முதலானவைகளும்,  வீழ்ந்தவை - தவறி  வீழ்ந்தவைகளாய், கிடந்த -
(ஒருவரும் எடுக்காமல் அவ்வவ்விடங்களில்) கிடந்ததாகிய, தோற்றம் -
விதமானது, மேலுலாம் - ஆகாசத்தில் வியாபித்திராநின்ற, வானயாறு -
ஆகாச  கங்கையானது,  வீழ்ந்து - விழுந்து,  இவண் - இவ்விடத்தில்,
கிடந்தது - கிடந்ததாகிய, ஒன்று - ஒரு தோற்றமாம், எ-று.      (34)