நான்காவது
பூரணசந்திரன் அரசியற் சருக்கம்
--------
357. அமிர்தகர னொளியின்முனி யறவுரைசென் றெறிப்பத்
திமிரமென நின்றவினை தீர்த்தெழுந்த மதியிற்
குமுதமென மலர்ந்துவத மாற்றுவன கொண்டே
யமலனடி மனக்கமலத் தருக்கனில்வைத் தெழுந்தான்.
(இ.பொ) (முன் சருக்கத்திற் கூறியபடி முனிவர்
தருமோபதேசம் செய்த பின்னர்) முனி - அந்த வரதர்ம
முனீஸ்வரனது, அறவுரை - தருமவசனமானது, அமிர்தகரனொளியின் -
சந்திரனது பிரகாசத்தினால், (மலர்ந்த) குமுதமென -
அல்லிமலரைப்போல, சென்று - பத்திரமித்திரனிடஞ் சென்று, எறிப்ப -
பிரகாசிக்க, திமிரமென - அந்தகாரம்போல, நின்ற - நிலைபெற்ற,
வினை - மித்தியாத்துவ பிரகிருத வினையை, தீர்த்து - நீக்கி, எழுந்த-
உதயமாகிய, மதியின் - அறிவினாலே, மலர்ந்து - விளங்கி, வதம் -
விரத சீலங்களில்,ஆற்றுவன - தன் சக்திக்குத் தக்கவற்றை, கொண்டு-
கைக்கொண்டு, மனக்கமலத்து - தனது ஹிருதயமாகிற தாமரைப்
புஷ்பத்தில், அமலன் - மலமில்லாத சர்வக்ஞனது, அடி - பாதத்தை,
அருக்கனில் - ஸூர்யனைப்போல, வைத்து - தரித்து (ஸ்தாபித்து),
எழுந்தான் - (அப்பத்திரமித்திரன்) எழுந்திருந்தான், எ-று. (1)
358. எழுந்துமுனி யிருகமல பாதந்தொழு தேத்திச்
செழுங்கனக மாடமிசைச் சீயபுரம் புக்கு
முழங்கியெழு முகிலிற்பொருண் முழுதும்வறி யோர்க்கு
வழங்கமனத் தழுங்கியுரைத் தாளவன்றன் மாதா.
(இ-ள்.) எழுந்து - (அப்படி) எழுந்திருந்து, முனி -
முனிவரனுடைய,
இரு - இரண்டாகிய, கமலம் - தாமரைப்புஷ்பம்
போன்ற, பாதம் - பாதங்களை, தொழுது - வணங்கி, ஏத்தி -
ஸ்தோத்திரம் பண்ணி, செழும் - செழுமைபெற்ற, கனகம் -
ஸ்வர்ணங்களையுடைய, சீயபுரம் - சிம்மபுரத்திலுள்ள, மாடமிசை -
தனது உப்பரிகையில், புக்கு - அடைந்து, முழங்கி - கர்ஜித்து, எழு -
எழும்பி மழையைப்பொழிகின்ற,முகிலில் - மேகத்தைப்போல,பொருண்
முழுதும் - தனது திரவிய முழுமையும், வறியோர்க்கு - ஏழைகளுக்கு,
வழங்க - தியாகமாகக் கொடுக்க, அவன்தன் - அப்பத்திரமித்திரனது,
மாதா - தாய், மனத்து - மனத்தில், அழுங்கி - வருத்தமடைந்து,
உரைத்தாள் - (கீழ்க்கண்டவற்றை அவனிடம்) கூறினாள்,
எ-று. (2)
|