ஏழாவது :
சக்கராயுதன் முத்திச் சருக்கம்
749. உலகமெனுந் திருவினிடை யுந்தியெனச் சம்பூத்
தலநிலவு பரதமலி தருமகண்ட மதனிற்
புலவர்புகழ் வரியபுரி சக்கர புரமென்
றுலகுடைய விறைவனுறை நகரமென வுளதே.
(இ-ள்.) உலகமெனும் - லோகமென்று சொல்லப்பட்ட, திருவின்
- இலக்ஷுமியினுடைய, இடை - மத்தியில் உள்ள, (அதாவது :மத்தியம
லோகமாகிய பூமியில் உள்ள), உந்தியென - நாபிபோல,
(அமைந்திராநின்ற, சம்பூத்தலம் - ஜம்பூத்வீபமென்னுந்தலத்து, நிலவு
- விளங்காநின்ற, பரதம் - பரத க்ஷேத்திரத்தில், மலி - நிறைந்த,
தருமகண்டமதனில் - தர்மக்கண்டத்திலே, புலவர் -
வித்துவாம்சர்களால், புகழ்வரிய - வர்ணித்தல் அரிதாகிய, புரி -
பட்டணமானது, உலகுடைய - மூன்றுலோக ஆட்சியையும் உடைய,
இறைவன் - ஜீனேந்திரன், உறை - தங்கியிராநின்ற, நகரமென -
ஸமவஸரணத்தைப்போல, சக்கரபுரமென்று - சக்கரபுரமென்று பெயர்
கூறப்பட்டு, உளது - மஹாலாவண்ணியமாகவும் ஆனந்தகரமாகவும்
உளதாகும், எ-று. (1)
750. கிடங்குமதி டெருவுகிடை மாளிகையி னொழுங்கு
நடுவரசன் மாளிகையி னமர்ந்திருந்த நகரம்
நுடங்குதிரை வேதிகையோ டாறுகுல மலைக
ணடுவடைந்த மலையுடைய தீபமது வனைத்தே.
(இ-ள்.) கிடங்கு - ( அப்பட்டணத்தைச் சூழ்ந்திராநின்ற )
அகழும், மதிள் - சுற்றுமதிலும், தெருவு - (அந்நகரத்தின்) வீதிகளும்,
கிடை - நிலையாகிய, மாளிகையின் ஒழுங்கும் -
(அவ்வீதிகளிலிராநின்ற) உப்பரிகையின் வரிசைகளும், நடு - (அந்நகர)
மத்தியில், (சேர்ந்திராநின்ற), அரசன் மாளிகையின் - இராஜ
மாளிகைகளும் ஆகிய இவற்றினால், அமர்ந்திருந்த -
பொருந்தியிருந்த, நகரம் - அந்நகரமானது, நுடங்கும் - ஓயாமல்
அசைகின்ற, திரை -அலைகளையுடைய மஹாலவண சமுத்திரத்தையும்,
வேதிகையோடு - அந்த மஹாலவண சமுத்திரத்தினுடைய
வஜ்ரவேதிகையையும், ஆறு - மஹா நதிகளையும், குலமலைகள் -
குலகிரி பர்வதங்களையும், நடு அடைந்த - மத்தியிலடைந்த,
மலையுடைய - பர்வதராஜனாகிய மஹாமேரு பர்வதத்தையும் உடைய,
தீபமது - ஜம்பூத்வீபத்தை, அனைத்து - நிகர்த்ததாம், எ-று.
|