928. அருமணி யிழந்த நாகம் போற்பல னலம்வந் தாற்றப்
பெருகிய துயர முற்றுப் பிறவியை வெருவிப் பின்னாண்
மருவிய பொருளும் நாடு மைந்தர்கட் கீந்து மாற்றை
விரகினா லெறியும் வீத ராகமா முனிவ னானான்.
(இ-ள்.) (அவ்வாறான பின்), அரும் - அரிதாகிய, மணி -
சிரோமணியை, இழந்த - இழந்துவிட்ட, நாகம்போல் -
சர்ப்பத்தைப்போல, பலன் - பல தேவனாகிய வீத பயன், ஆற்ற -
மிகவும், அலம் வந்து - சுழற்சியுற்று, பெருகிய - பெரிதாகிய,
துயரமுற்று - துக்கமடைந்து, பிறவியை - இச்சம்ஸாரப் பிறப்புக்கு,
வெருவி - பயந்து, பின்னாள் - பிந்திய நாட்களில், மருவிய -
சோர்ந்திராநின்ற, பொருளும் - ஐஸ்வரியமும், நாடும் - தேசத்தையும்,
மைந்தர்கட்கு - தங்கள் குமாரர்களுக்கு, ஈந்து - கொடுத்து, மாற்றை -
இச்சம்ஸாரத்தை, விரகினால் - கிரமத்தினால், எறியும் -
கெடுக்கும்படியான, வீதராகம் - ஆசையற்ற, மா - பெரிதாகிய குணம்
பொருந்திய, முனிவனானான் - விஷயக்ஷய வர்ஜிதனாகிய
முனிவரனாகுந் தன்மையைப் பொருந்தினான், எ-று. (38)
929. வலம்புரி வண்ண னாரா தனையினா லுடம்பு விட்டிட்
டிலாந்தவ கற்பம் புக்கான் யானவ னின்று வந்தேன்
புலங்கண்மேற் புரிந்து வீந்த கேசவன் புக்க தேச
மிலங்கிப்போய்த் தீர யானந் நரகிற்கண் டிடரை யுற்றேன்.
(இ-ள்.) வலம்புரி வண்ணன் - வலம்புரிச் சங்கு போலும்
வெள்ளை வர்ணத்தையுடைய பலதேவன், ஆராதனையினால் - (ஞான,
தர்சன, சாரித்திர, தபோ ஆராதனையாகிய, சதுர்வித) ஆராதனா
பாவனையினால், உடம்பு விட்டிட்டு - தனது சரீரத்தை விட்டு,
இலாந்தவகற்பம் - லாந்தவகல்பத்தில், புக்கான் - அடைந்தான்,அவன்
- (அந்தப் பலதேவனகியிருந்து இறந்து லாந்தவேந்திரனாகிப் பிறந்த
தேவனாகிய) அவன், நான் -நானே, இன்று - இப்பொழுது, (சஞ்சயந்த
பட்டாரகருடைய, கைவல்ய பூஜை பரி நிர்வாண பூஜைகளைச்
செய்வதற்கு), வந்தேன் - வந்தனன், (தரணேந்திரனே ! நீயும்
அதற்காகத் தான் இவ்விடத்தில் வந்தாய்), புலங்கண் மேல் - விஷய
வாஞ்சைகளின் மேல், புரிந்து - மிகவும் விரும்பி, வீந்த - இறந்து
போன, கேசவன் - அந்த விபீஷணனென்னும் வாஸுதேவன், புக்க -
அடைந்த, தேசம் - க்ஷேத்திரமானது, இலங்கி - அவதிஜ் ஞானத்தால்
விளங்க, (அதனை அறிந்து அவனிருக்கப்பட்ட இடமாகிய), அந்நரகில்
- அந்த நரகத்திலே, யான் - நான், போய் - சென்று, கண்டு -
அவனைப் பார்த்து, தீர - அவனது நரக துக்கம் நீங்கும்படி,
இடரையுற்றேன் - மிகவும் மனத்தில் வருத்தமுற்று அவன்
சமீபமடைந்து தர்மபோதனை செய்ய வாரம்பித்தேன், எ-று. (39)
ஒன்பதாவது :
பலதேவன் சுவர்க்கம்புக்கச் சருக்கம் முற்றிற்று. |