இரண்டாவது
சஞ்யந்தன் முத்திச்சருக்கம்.
141. பஞ்சம கதிக்கட் சென்ற பரமன்றன் சரம மூர்த்திக்
கஞ்சலி செய்து வாழ்த்திச் சிறப்பயர்ந் தமரர் போனார்
வஞ்சமி றவத்தி னான்சஞ் சயந்தனும் வணங்கிப் போகி
எஞ்சலில் கொள்கை தாங்கி யிராப்பகல் படிம நின்றான்.
(இ-ள்.) பஞ்சம கதிக்கண் - ஐந்தாவதாகிய மோட்சகதியில்,
சென்ற - அடைந்த, பரமன்றன் - வைஜயந்த பகவானுடைய,
சரமமூர்த்திக்கு - அந்திய சரீரத்திற்கு, அஞ்சலி செய்து - வணக்கஞ்
செய்து, வாழ்த்தி - ஸ்தோத்திரம் பண்ணி, சிறப்பு - பரி நிர்வாண
பூஜையை, அயர்ந்து - செய்து, அமரர் - தேவர்கள், போனார் -
தங்கள் தங்களிடம் சென்றார்கள், வஞ்சமில் - மாய்கையில்லாத,
தவத்தினான் - தபத்தையுடையவனாகிய, சஞ்சயந்தனும் - சஞ்சயந்த
முனியும், வணங்கி -(வைஜயந்த பட்டாரகரை பரிநிர்வாண பூஜையில்)
வணங்கி, போகி - (ஏகவிகாரியாகிப்) போய், எஞ்சலில் -
குறைவில்லாத, கொள்கை - சாரித்திரங்களை, தாங்கி - தரித்து,
இராப்பகல் - இரவும் பகலும், படிமம் - ப்ரதிமாயோகத்தில்,
நின்றான் - நிலைபெற்றிருந்தான், எ-று. (1)
142. மான்கன்றும் புலியின் கன்று மாறியே முலையை யுண்ணும்
ஆன்கன்று மானைக் கன்றுஞ் சிங்கத்தின் கன்றோ டாடும்
ஊன்றின்று வாழுஞ் சாதி யத்தொழி லொழிந்த வுள்ளந்
தான்சென்ற சாந்தி யார்க்கும் மாதவன் றன்மை யாலே.
(இ-ள்.) மாதவன் - மஹா தபஸையுடைய சஞ்சயந்த முனியினது,
தன்மையால் - குணத்தினால், மான்கன்றும் - மான்குட்டிகளும்,
புலியின்கன்றும் - புலிக்குட்டிகளும், மாறி - ஒன்றின் தாயில்
மற்றொன்றுமாறுபட்டு, முலையை - ஸ்தனத்தை (அதாவது :
தனத்திலுள்ள பாலை), உண்ணும் - குடிப்பனவாகும் (அதாவது :
மான்குட்டி புலியினிடத்தும், புலிக்குட்டி மானிடத்தும் விரோத
குணமின்றிப் பாலுண்டு விளையாடும்), ஆன்கன்றும் -
காட்டுப்பசுவின்கன்றும், ஆனைக்கன்றும் - யானைக் குட்டிகளும்,
சிங்கத்தின் - சிம்மத்தினது, கன்றோடு - குட்டிகளோடு, ஆடும் -
விளையாடும், ஊன்தின்று - மாமிசந்தின்று, வாழும் -வாழ்கின்ற, சாதி
- கீழ்ஜாதிகள், அத்தொழில் - அக்காரியத்தை, ஒழிந்த - விட்டு
நீங்கின, யார்க்கும் - எவர்களுக்கும், உள்ளம் - மனம், சாந்தி - சாந்தி
பரிணாமத்தில், சென்ற - சார்ந்தன,எ-று.
தான், ஏ - அசைகள். (2) |