143. எலிசென்று நாகந் தன்மே லேறிடும் நாகங் கீரி
நலியுமென் றஞ்ச லில்லை மானமா வாலின் முள்ளைப்
புலிசென்று வாங்கும் புல்வாய் கிடந்துழி நடுங்குமென்று
நலிவுசெய் வேடர் செல்லார் செற்றமி னற்ற வத்தால்.
(இ-ள்.) செற்றம் - த்வேஷம், இல் - இல்லாத, நல் -
நன்மையாகிய, தவத்தால் - அத்தபஸினாலே, எலி - எலியானது,
சென்று- போய், நாகந்தன் மேல் - ஸர்ப்பத்தின்மேல், ஏறிடும் - ஏறி
விளையாடும், நாகம் - ஸர்ப்பமானது, கீரி - கீரிப்பிள்ளை,
நலியுமென்று - வருத்துமென்று, அஞ்சலில்லை - பயப்படுவதில்லை,
மானம் - அபிமானமுடைய, மா - கவரிமிருகத்தினது, வாலின் -
வாலில் பற்றப்பட்ட, முள்ளை - முள்ளுகளை, புலி - புலியானது,
சென்று - போய், வாங்கும் - நீக்கிவிடும், புல்வாய் - மான்
கூட்டங்கள், கிடந்துழி - படுத்திருக்கின்ற விடங்களில், நடுங்குமென்று
- (அவைகள்) பயப்படுமென்று, நலிவுசெய் - துன்பத்தைச்
செய்யும்படியான, வேடர் - வேடர் முதலானவர்கள், செல்லார் -
அடையமாட்டார்கள், எ-று. (3)
144. ஒருவகைப் பட்ட வுள்ளத் திருவகைத் துறவு தன்னான்
மருவிய குத்தி மூன்றிற் சன்னைக ணான்கு மாற்றிப்
பொருவிலைம் பொறி செறித்துப் பொருந்தியா வாச மாறின்
இருவகைச் செவிலித் தாய ரெழுவரைச் செறிய வைத்தான்.
(இ-ள்.) ஒருவகைப்பட்ட - ஒரேவிதமான (அதாவது :
வேறொன்றிற் செல்லாத), உள்ளத்து - மனதில், இருவகை - இரண்டு
விதமாகிய, துறவு தன்னால் - (பாஹியாப்பியந்தர பரிக்கிரகத்
தியாகமாகிய) தபத்தினால், மருவிய - சேர்ந்த, குத்தி மூன்றில் -
திரிகுப்திகளினால், சன்னைகள் நான்கும் - சதுஸ்ஸன்னைகளை, மாற்றி
- நீக்கி, பொருவில் - உவமையில்லாத, ஐம்பொறி -
பஞ்சேந்திரியங்களை, செறித்து - விஷயங்களிற்
செல்லவொட்டாமற்றடுத்து, ஆவாசமாறில் - ஷடாவசியக் கிரியைகளில்,
பொருந்தி -சேர்ந்து, இருவகை - இரண்டு விதமாகிய, செவிலித்தாயர் -
புண்ணிய பாவத்திற்குச் செவிலித் தாயாகியவர்களில், எழுவரை -
புண்ணியத்திற்குத் தாயாகிய ஏழுவிதமான பரிணாமங்களை, செறிய -
மனதில் சேரும்படியாக, வைத்தான் - தரித்தான் (அதாவது :
சுபத்தியானத்தோ டொன்றினான்), எ-று.
சதுஸ்ஸன்னையாவன : ஆஹாரஸன்னை, ஸ்த்ரீஸன்னை,
பயஸன்னை, பரிக்கிரஹ ஸன்னை என்பனவாம்.
ஷடாவசியக்கிரியைகளாவன. - ஸாமாயிகம், ஸ்துதி, வந்தனை,
பிரதிக்கிரமணம், பிரத்தியாக்கியானம், வியுத்ஸர்க்கம் என்பனவாம்.
இவைகளின் விவரத்தை பதார்த்த சாரத்தில் பார்த்துக்கொள்க. (4) |