பக்கம் எண் :


70மேருமந்தர புராணம்  


 

 145. சுத்தியோ ரெட்டிற் றூயா னொன்பதா மியோகி லூற்றுப்
     பத்தையுந் தடுக்க வங்கம் பதினொன்றிற் பயின்ற ஞானஞ்
     சித்தம்பன் னிரண்டிற் சென்று சிந்தையை முறுக்கி யிட்டுப்
     பத்துமூன் றாகி நின்ற கிரியையைப் பயின்றிட் டானே.

     (இ-ள்.) சுத்தியோரெட்டில் - அஷ்ட சுத்திகளினால், தூயான் -
பரிசுத்தனாகிய சஞ்சயந்தமுனி,  ஒன்பதாம் -  ஒன்பதாகிய, யோகில் -
யோகத்தினால்,  ஊற்றுபத்தையும் -  தசவிதமான ஆஸ்ரவங்களையும்,
தடுக்க -     தடுக்கும்படியாக,       அங்கம்     பதினொன்றில் -
ஏகாதசாங்கமாகிய சாஸ்திரங்களில், பயின்ற - பழகிய, ஞானம் - சுருத
ஞானத்தையுடைய,    சித்தம்   -    மனஸானது,   பன்னிரண்டில் -
துவாதசானுப்பிரேன்க்ஷகளில்,   சென்று  -   அடைய,   சிந்தையை -
தியானத்தை,  முறுக்கியிட்டு  -  பலஞ்செய்து,  பத்துமூன்றாகிநின்ற -
திரயோதசவிதமாகிய, கிரியையை - சாரித்திரங்களை, பயின்றிட்டான் -
பழகினான், எ-று.

     சுத்திகள்    எட்டாவன  :-     பரிணாமசுத்தி,    விநயசுத்தி,
ஈரியாபதசுத்தி,    பிரதிஷ்டாபநசுத்தி,   சய்யாஸனசுத்தி,   வாக்சுத்தி,
பிக்ஷாசுத்தி, காயசுத்தி என்பனவாம்.

     யோகங்கள்  ஒன்பதாவன  :-  மனம்,  வசனம், காயம், கிருதம்,
காரிதம்,    அனுமோதம்,    ஸம்ரம்பம்,   ஸமாரம்பம்,    ஆரம்பம்
என்பனவாம்.

     ஏகநகசாங்யங்கள்   என்பன  :-   துவாதச  அங்காகமங்களில்
திருஷ்டிவாதாங்கம் நீங்கலாக மற்ற பதினொன்றுமாம்.

     திரயோதச    சாரித்திரங்களாவன   :-   பஞ்சமஹா   விரதம்,
பஞ்சஸமிதி, திரி குப்தி என்பனவாம்.                         (5)

 146. காமமா மரணி யத்தைக் கடந்தபின் மடங்கல் போலும்
     வாமமார்ந் திலங்கு மாட மனோகர புரத்தைச் சேர்ந்த
     பீமமா மரணி யத்திற் பெரியவ னின்ற போழ்திற்
     சாமமார்ந் திலங்கு மேனித் தானவ னொருவன் வந்தான்.

     (இ-ள்.)  காமமாம் - ஆசையாகிற,  அரணியத்தை - வனத்தை,
கடந்த  பின்  -  நீங்கினபிறகு,  வாமம்  -  அழகினால்,  ஆர்ந்து -
நிறைந்து,  இலங்கும் - விளங்கும்,  மாடம் -  உப்பரிகைகளையுடைய,
மனோகரபுரத்தை  -  மனோஹரபுரமென்னும்  நகரத்தை,   சேர்ந்த -
சேர்ந்து    சமீபத்தில்    இராநின்ற,    பீமமாம்  -  பயங்கரமாகிய,
அரணியத்தில்  -   காட்டில்  (அதாவது :  பீமாரண்ணிய  மென்னும்
பெயரினையுடைய  காட்டில்), மடங்கல்போலும் - சிம்மத்தைப்போலும்,
பெரியவன் - பெரியோனாகிய  சஞ்சயந்த  முனிவன்,  (நிர்ப்பயனாகி),
நின்ற  போழ்தில்  - யோகத்தில் நின்ற   காலத்தில்,  சாமமார்ந்து -
கறுப்புநிறமாய் நிறைந்து, இலங்கும் - விளங்கும், மேனி - சரீரமுடைய,
தானவனொருவன் -  ஒரு  வித்தியாதரன்,  வந்தான் - அவ்விடத்தில்
வந்தான், எ-று.                                          (6)