பக்கம் எண் :


10காஞ்சிப் புராணம்


     போலி எழுத்தையும் எழுத்தாக ஆளுதல் செய்வர், ஆகலின் தனது
போலிச் செய்யுளையும் கேள்வியான் மிக்கோர் மேற்கொள்வர் எனுந் துணிவு
பற்றி, நாணிலியாய்ச் சிவகதை விரித்துரைக்கப் புகுந்தேன் என ஸ்ரீமாதவச்
சிவஞானயோகிகள் அருளினர்.

     ‘தாழ்வெனுந் தன்மையோடுஞ் சைவமாம் சமயஞ் சாரும் ஊழ் பெற்று’ப்
‘பணியுமாம் என்றும் பெருமை’ எனும் பண்பின் வெளிவந்தன இப்பாடல்கள்.

     பழுத்த கேள்வியோர்-கேள்வி பழுத்தோர்; கேள்வி ஞானத்தான்
முதிர்ச்சி பெற்றவர். விழுத்த நாணினேன்-நாண் விழுத்தேன்-நாணம்
நீங்கியேன். ‘கழிந்த உண்டியர்’ (திருமுரு. ) போலக்கொள்க. இது கேள்விச்
செல்வரை நோக்கியது. விளம்புதல்-விரித்துரைத்தல்.

நெறிவ ழாஉமை பூசனை போல்நெறி பிறழ்ந்தோன்
எறித ருங்கலுங் கைக்கொளுங் கச்சியெம் பெருமாற்
கறிவின் மேலவர் காப்பியப் பனுவல்போல் அறிவின்
குறியி லேன்கவிப் புன்சொலும் கொள்வது வழக்கால்.   26

     உமையம்மையார் வேண்டும் உபகரணங்களுடன் விதிவழுவாது இயற்றிய
பூசனைகொண் டருளிய திருவேகம்பப்பெருமானார் சாக்கிய நாயனார் விதிவழி
கடந்தெறிந்த கல்லையும் கைக்கொண்டு பயனை நல்கினர். இருவேறு வகை
நிகழ்ச்சியையும் ஏற்றருள்வோ னாகலின், அப்பெருமான், அறிவின்மேலவர்
பெருங்காப்பியங்களை ஏற்றருளியவாறு அறிவின் அடையாளமும்
காணப்பெறாத தம் புன்சொற் பாடலும் கைக் கொண்டருளுவது வழிவழிவந்த
வழக்கேயாகும்; புதுமுறை அன்று.

சிறப்புப் பாயிரம்

எழுசீரடி யாசிரிய விருத்தம்,

     அருட்பணிக் குரிய மகேச்சுரர் முதலா நால்வருந் தருகவென்
றறைய; மருட்பகை துமிக்கும் காஞ்சிமான் மியத்தை வழங்குதென்
மொழியினா லுரைத்தான், கருப்பகை இரிக்கும் ஞானமும் ஏனைக்
கலைகளுங் கரிசறப் பயின்ற, மருப்பொழி லுடுத்த ஆவடு துறையில்
வாழ் சிவஞானமா தவனே.                               27

     பிறவியை அகற்றும் ஞான நூல்களையும், பிறகலைகளையும்
தெளியக்கற்ற திருவாவடுதுறை ஆதீன ஸ்ரீலஸ்ரீ மாதவச் சிவஞான யோகிகள்,
திருத்தொண்டிற் குரிய மகேச்சுரர் முதலான நால்வகையினர் மயக்கொழிக்கும்
காஞ்சிப் புராணத்தைத் தமிழ் மொழியில் அருள்கென அருள் செய்தனர்