பக்கம் எண் :


11


திருநாட்டுப் படலம்

கலிநிலைத் துறை

பணங்கொள் பாம்பணி கம்பனார் பனிவரை பயந்த
அணங்கி னோடென்றும் அமர்ந்தினி தரசுவீற் றிருக்கும்
உணங்க ரும்புகழ்க் காஞ்சியை அகந்தழீஇ உம்பர்
வணங்க மேவரும் பாலிநாட் டணிநலம் வகுப்பாம்.      1

     திருவேகம்பப் பெருமானார் காமாட்சி யம்மையுடன் என்றும் விளங்க
வீற்றிருந்து அருளாட்சி புரியும் திருக் காஞ்சியப் பதியைத் தன்னுட்கொண்டு
சிறத்தலின் தேவரும் வணங்க இருக்கின்ற பாலி நாடெனும் தொண்டை
நாட்டினிருவகை நலங்களையும் வகுத்துரைப்பாம்.

     இந்தப் பூமி சிவனுய்யக் கொள்கின்றவாறு என்று நோக்கித் தேவரும்
வணங்குவர்.

மழைச் சிறப்பு

கடல் கடைந்திடச் செல்லுறூஉம் வெள்ளைமால் கடுப்பப்
படலை வெண்முகில் பரவைநீ ருழக்கிவாய் மடுத்து
விடமெ ழுந்தென மீண்டஅம் மாயனை விழைய
உடல்க றுத்துவிண் நெறிப்படர்ந் தொய்யென மீண்டு.    2

     திருமால், பாற்கடலைக் கடைய, வெண்ணிற மேனியராய்ச் சென்று
கருகி மீண்டனர். கடலை நோக்கிச் சென்ற வெண்ணிற மேகங்களும் நீரைப்
பருகி அத்திருமாலை ஒப்பக் கருநிறமுற்று வான்வழி விரைய மீண்டு, 

     உழக்கி-ஒய்யென இவற்றை உவமைக்கும் கூட்டுக, புவியின் மிக்க
பரப்பினது ஆகலின் கடல் பரவை எனப்படும். படலை-தொகுதி. படர்ந்து-
சென்று; துன்புற்று.

அற்றை ஞான்றுமால் கயிலையைச் சரணடைந் தாங்குப்
பொற்ற நந்தியஞ் சாரல்சூழ் பொருப்பினைக் குறுகிக்
கற்றை வார்சடைச் சுந்தரன் கடவவான் மதுரை
முற்று நான்முகி லெனவரை முழுவதும் பொதிந்து.      3

     திருமால், அந்நாளில் திருக்கைலை மலையைச் சரணடைந்து
சார்ந்தாற்போலக் கரிய மேகங்களும் அழகிய நந்தி மலையைச் சூழ்ந்து,
சோமசுந்தரப் பெருமான் நான்கு முகில்களை ஏவ மதுரை மாநகரை
வளைத்தாற்போல அம்மலையைப் பொதிந்துகொண்டு,