அறுசீரடி யாசிரிய விருத்தம் உடுவணி குடுமிக் கோடு பிளவுபட் டுடையப் பெய்யுங் கொடுமழைக் காற்றா தங்கட் குளிர்பெயல் மாற எண்ணி நெடுமலை எடுத்துக் காட்டு நெட்டிதழ்க் காந்தட் கொள்ளி விடுசுடர்க் கனலி அந்தப் புனலொடும் வீந்த தன்றே 11 | விண்மீன்கள் தவழ வளர்ந்த மலைச்சிகரங்கள் பிளவு படப் பெய்யும் கொடிய மழையைப் பொறாத நந்திமலை அம்மழையைத் தவிர்க்கும் உபாயம் நாடிக் காந்தளாகிய கொள்ளிக்கட்டையை எடுத்துக்காட்ட அக்கொள்ளியொடு மழையும் கெட்டது. மழையை நிறுத்தக் கொள்ளி காட்டல் வழக்கு. உடு-நட்சத்திரம் போதம்மே லாகப் பண்டே புல்லிய மலநோய் தீர்ந்தும் வாதனை தாக்கு மாபோல் மழைப்பெயல் மாறித் தீர்ந்துங் காதல்செய் துறையும் புள்ளும் மாக்களும் கவன்று நெஞ்சம் நோதக மரங்க ளெல்லாம் நுண்துளி துவற்றும் மாதோ. 12 | மெய்யறிவு மேலிட அநாதியே பற்றியுள்ள மலவலி கெட்டும் வாசனை தாக்கித் துன்புறுத்துவ தொப்பத், தம்மை விரும்பிச் சார்ந்து வாழும் பறவை விலங்கினங்கள் மனம் வருந்த மரங்கள் துவலையைத் துவற்றும். ‘அடை மழை விட்டும், செடி மழை விடவில்லை’ என்பது வழக்கு. கனைபெயல் எழிலிக் கூட்டங் கலிவிசும் பகடு போழ்ந்த நனைமுடி நந்திக் குன்றம் நளிபடப் பொழியுந் தெண்ணீர் புனைமறை வசிட்ட மேலோன் செருத்தல்ஆன் பொழிந்த தீம்பால் வனைபுகழ் வெள்ள மென்னத் திசைதொறும் வழிந்த மன்னோ. 13 | செறி பெயலைக் கொண்ட மேகங்கள், தேனடை சூழ்ந்த நந்திமலை குளிர்ச்சியுறப் பொழியும் நீர் வசிட்ட முனிவர்வழி நிற்கும் காமதேனுப் பொழிந்த இனிய பால் வடிவெடுத்த புகழதுபெருக்கம் போலத் திசை தொறும் வழிந்தன. கலி-ஒலி, விசும்பின் குணம். அகடு-நடுவிடம், செருத்தல்-மடி. பாலியாற்று வளம் கண்ணகன் குடுமிக் குன்றிற் கல்லெனக் கறங்கி ஆர்த்து விண்ணிவர் ஏணி யென்ன வியன்முடி தொடுத்து வீழுந் தண்ணறா அருவி யெல்லாந் தலைத்தலை விரிந்து சென்று புண்ணியப் பாலி யாற்றிற் சேர்ந்துடன் போய மாதோ. 14 | |