பக்கம் எண் :


திருநெறிக்காரைக்காட்டுப்படலம் 151


ஒருபொழு தாடினர் உம்பர் கோனிடம்
இருபொழு தயனிடம் எண்ணும் முப்பொழு
தரியிடம் நாற்பொழு தாயின் முத்தியே
மருவுவர் யார் அதன் வண்மை கூறுவார்.       39

     ஓர் பொழுது சத்திய விரதத்தில் நீராடினர் இந்திரபதம் பெறுவர்;
இருபொழுது மூழ்கினோர் பிரமபதம் அடைவர்; முப்பொழுது மூழ்கியோர்
திருமால் பதவியைப் பெறுவர்; நாற்பொழுது மூழ்கினராயின் வீட்டினைத்
தலைப்படுவர். அத்தீர்த்தத்தின் கொடைக்குணத்தையாவர் கூற வல்லவர்.

புந்திநாள் முழுகுநர் புகுவர் முத்தியின்
அந்தநாள் மூழ்கலின் அரச நீயும்இப்
பந்தமில் வீடுறற் பாலை யாயினை
மந்தணம் இதுவெனக் கேட்ட வாசவன்.         40

     அரசனே, புதன்கிழமை அத்தீர்த்தத்தில் மூழ்குவோர் முத்தியைத்
தலைப்படுவர். நீயும் அந்நாளில் மூழ்கினமையால், இப்பாச மில்லாத
வீட்டினை அடைதற்குரிமை உடையை ஆயினை; இதுவே இரகசியம்
(உட்கிடை) எனக் கூறச் செவிமடுத்த இந்திரன்,

     பந்தம் இல் வீடு-‘முப்பத்தாறு தத்துவங்களுக்கும் அப்பாற்பட்ட
சிவனடியைச் சேரும் முத்தி’ (சிவ-சி-264) பந்தம் உள்ளன: ‘இம்மையே’
என்னுஞ் செய்யுளினும் (சிவஞான சித்தியார்) ‘அரிவையர்’ என்னும்
செய்யுளினும் (சிவப்பிரகாசம்) காண்க. மந்தணம்-இரகசியம் (தலவிசேடப்
படலம் 31.)

இப்பெருந் தீர்த்தநீர் எற்றை ஞான்றினும்
அப்புத வாரநாள் அதிக மாயதென்
செப்புதி என்றலுந் தேசி கப்பிரான்
ஒப்பறு கருணையின் உரைத்தன் மேயினான்      41

     சத்திய விரத தீர்த்தநீர்க்கு மற்றைய ஆறுநாட்களினும் புதன் கிழமை
சிறப்பு மிகுவது என்னை? அதனைக் கூறுக எனலும் ஞான மூர்த்தியாகிய
குரு உவமையில்லாத பெருங் கருணையினாலே உரைத்தலை விரும்பினார்.
வாரம்-உரிமை.

புதன் வழிபட்ட வரலாறு

கொச்சகக் கலிப்பா

மதிக்கடவுள் தாரைதனை மணந்தீன்ற மகவான
புதக்கடவுள் கிரகநிலை பெறுவதற்குப் புரிதாதை
கதித்துரைத்த மொழியாறே கருதருஞ்சத் தியவிரதப்
பதிக்கண் அணைந் துயர்தீர்த்தம் படிந்தாடித் தவஞ் செய்தான்.  42