பக்கம் எண் :


152காஞ்சிப் புராணம்


     சந்திரன் பிருகற் பதியின் மனைவியாகிய தாரையைக் கூடிப்பயந்த
மகவாகிய புதன்’ கிரக பதவியை அடைதல் வேண்டி, விரும்புகின்ற தந்தை
எழுச்சியுற்று உரைத்த மொழிப்படியே நினைக்கவும் அரியசத்திய விரதத்
தலத்தை அணைந்து உயர்தற்குக் காரணமாகிய தீர்த்தத்தில் மூழ்கித்
தவமியற்றினான்.

     சந்திரனைக் குரவன் இல் விழைந்தவன் என்றனர். (திருநகரப். 81)

மேதகுசத் தியவிரதப் பெருமானும் வெள்விடைமேல்
மாதுமையா ளுடன்ஏறி வயக்கரிமா முகன்இளையோன்
காதல்புரி அருள்நந்தி கணநாதர் புடைசூழ
ஆதரமோ டெழுந்தருளித் திருக்காட்சி அளித்தருள.    43

     மேன்மை பொருந்திய சத்திய விரதேசரும் வெள்ளிய விடைமேல்
உமையம்மையுடன் எழுந்தருளி வெற்றியமைந்த யானை முகத்தையுடைய
மூத்த பிள்ளையாரும், இளைய பிள்ளையாரும் ஆன்மாக்களிடத்து விருப்பம்
செய்யும் நந்தி தேவரும் கணநாதரும் பக்கத்திற் சூழ்ந்து வரக்கருணை
யோடெழுந்தருளித் திருக்காட்சி அளித்தருள.

கண்டுபர வசனாகிக் கைதொழுது பெருங்காதல்
மண்டிஎழ மயிர்சிலிர்ப்ப மனத்தடங்காப் பேருவகை
கொண்டுநில முறவீழ்ந்து குழைந்துருகி விழிதுளிப்பத்
தொண்டனேன் உய்ந்தேன்என் றெழுந்தாடிக் துதிசெய்வான்.  44

     தரிசித்துப் பரவசனாகிக் கைகூப்பிப் பேரன்பு மீதூர்ந்தெழவும்,
புளகிக்கவும், மனத்தி லடங்காத பெருமகிழ்ச்சி கூர்ந்து பூமியின் மேற்
பொருந்த விழுந்து மனங்குழைந்துருகிக் கண்கள் நீர்சிந்த அடியனேன்
பிழைத்தேன் என்று எழுந்து ஆடித் துதி செய்யாநின்றான்.

நெடியோனும் மலரவனும் நேடரிய திருவடிகள்
அடியேனுக் கெளிவந்த அருட்கருணைத் திறம் போற்றி
ஒடியாத எண்குணங்கள் உடையானே எனையுடையாய்
கடியார்சத் தியவிரத நாயகநின் கழல்போற்றி,         45

     திருமாலும் பிரமனும் தேடிக் காணுதற்கு அரிய திருவடிகள்
அடியேனுக்கெளிதாக எழுந்தருளிய பெருங் கருணையின் நலத்திற்கு
வணக்கம். கெடாத எண்குணங்களும் உடையவனே என்னையும் அடிமை யாக
உடையவனே! காவலமைந்த சத்திய விரத நாயகனே நின் திருவடிகளுக்கு
வணக்கம்.

     எண்குணங்களாவன: தன் வயத்தனாதல், தூய உடம்பினனாதல்,
இயற்கை யுணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களின்
நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றுலுடைமை , வரம்பிலின்ப முடைமை
என்பன.