என்றேத்தி எந்தையென யான்கிரக நிலைபெறவுங் குன்றாதுன் திருவடிக்கீழ் மெய்யன்பு கூர்ந்திடவும் இன்றாதி என்வாரத் தித்தீர்த்தம் படிந்துபொறி வென்றோர்முன் னையின்இரட்டிப் பயன் எய்தி வீடுறவும். 46 | என்று துதித்து எனது தந்தையைப்போல யான் கிரகபதம் பெறவும், உனது திருவடிக்கீழ் குறையாது உண்மையன்பு சிறக்கவும், இன்றுமுதல் (புதன்) என் கிழமையில் இத் தீர்த்தத்தில் மூழ்கி ஐம்பொறிகளை வென்றோர் முன்னையினும் இருமடங்கு பயன் பெற்று (நுகர்ந்து முடிவில்) வீட்டினை எய்தவும். வேண்டுமென இரந்தேற்ப அளித்தருளி வெள்விடைமேல் ஆண்டகைஅங் ககன்றனனால் அன்றுமுதல் அத்தீர்த்தம் பூண்டபுத வாரத்துச் சிறப்பெய்தும் புந்தியுறக் காண்டியெனுங் குரவன்உரை காரூர்தி செவிமடுத்தான். 47 | வேண்டுமென இரப்ப அருள்செய்து விடைப்பாகன் திருவுருக்கரந்தனன். ஆகலின் புதன்கிழமை அத்தீர்த்தத்திற்கு மிகு சிறப்பாம். மனங்கொளக் காண்பாயாக என்னும் குருவின் மொழியை மேகவாகனனாகிய இந்திரன் செவி மடுத்தான். இந்திரன் சத்தியவிரதம் அடைந்து வழிபடுதல் அப்பொழுதே அரசுரிமை அம்மறையோன் புடைவைத்துச் செப்பருஞ்சத் தியவிரதத் திருநகரின் விரைந்தெய்தி முப்பொழுதும் நீராடி முழுநீறு மெய்பூசி மெய்ப்படுகண் டிகைபூண்டு புண்டரமும் நுதல்விளங்க. 48 | அரசாட்சியைக் குருவினிடத்து அப்பொழுதே சேர்த்திச் சத்திய விரதத் திருத்தலத்தினை விரைந்தடைந்து மூன்று பொழுதினும் நீரில் மூழ்கி மெய்ம் முழுதும் விபூதியைப்பூசி உருத்திராக்கவடமும் நெற்றியில் திரிபுண்டரமும் விளங்கப்பூண்டு. உருத்திரமும் கணித்துள்ளப் புண்டரிகத் துமைபாகன் திருப்பதங்கள் சிந்தித்துக் கோயிலினுள் சென்றெய்தி அருத்தியொடும் பூசனைசெய் தாராமை மீக்கொள்ளப் பெருத்தெழுந்த பேரன்பிற் பெருமானைத் துதிக்கின்றான். 49 | சீருத்திரமும் அறிவாற்கணித்து இருதய தாமரையில் மங்கை பங்கன் திருவடிகளைத் தியானித்துத் திருக்கோயிலின் உள்புக்கு விருப்புடன் பூசனை செய்து அடங்காமை மேலெழப் பெருகி எழுந்த முறுகிய அன்பிற் பெருமானைத் துதிசெய்கின்றான். ஆராஅன்பு; ‘‘நீடுபூசனை நிரம்பியும் அன்பினால் நிரம்பார்’’ |