இந்திரனுக்குச் சத்தியவிரதீசர் காட்சி கொடுத்தருளுதல் அடைக்கலம் அடியேன் என்றென் றழுதிரந் தயருங் காலை விடைத்தனிப் பெருமான் அன்னோன் பத்தியின் விளைவு நோக்கி நடைப்பிடி உமையா ளோடு நண்ணிநீ வேண்டிற் றென்னை எடுத்துரை தருதும் என்றான் இந்திரன் தொழுது வேண்டும். 53 | அடியேன் உன் அடைக்கலப் பொருள் என்று பல்காற் கூறி அழுது குறையிரந்து தளர்ந்த பொழுதில் விடை ஊரும் தன்னொப்பாரிலி அவன் பேரன்பின் முதிர்ச்சியை நோக்கிப் பெண் யானையின் நடையுடைய பெருமாட்டியோடும் எழுந்தருளி நீ விரும்பியது யாது அதனைக் கூறுதி தருவோம் என வாய்மலர, இந்திரன் வணங்கி வேண்டுவான். வினைவழிப் பிறந்து வீந்து மெலிந்தநாள் எல்லை இல்லை அனையவற் றடிகேள் உன்றன் அடிதொழப் பெற்றி லேனால் நினைவருந் தவத்தால் இன்று நின்னருட் குரியன் ஆனேன் இனிவரும் பிறவி மாற்றி என்றனை உய்யக் கோடி. 54 | அடிகளே நல்வினை தீவினைகள் செலுத்து மாற்றால் பிறந்தும் இறந்தும் தாக்குண்டு மெலிந்த காலங்கள் கணக்கில; அக்காலங்களில் உன்னடியைத் தொழும்பேறு வாய்த்திலேன்; எண்ணவும் முடியாத தவப் பயனால் இப்பிறப்பில் நின் திருவருளுக்குப் பாத்திரம் ஆயினேன்; இனி வரும் பிறவி (உளஎனின்) அதனை ஒழித்து என்னை உய்ய ஆட்கொள்வாய். இத்தலந் தீர்த்தம் என்றன் பெயரினான் இலக வேண்டும் அத்தனே என்ன லோடும் அவ்வகை அருளி மீளா முத்திசேர் கணநா தர்க்குள் முதல்வனாந் தன்மை நல்கிப் பைத்தபாம் பாரம் பூண்ட பண்ணவன் இலிங்கத் தானான். 55 | எந்தையே இத்தலமும், இத்தீர்த்தமும், இந்திரபுரமும் இந்திர தீர்த்தமும் எனப் பெயர் விளங்க வேண்டும் எனவேண்ட அவ்வாறே அருள்செய்து மீண்டும் பிறவாது முத்தியைச் சேரும் கணநாதர்களுக்கு முதல்வனாந் தலைமையை நல்கிப் படம் விரித்த பாம்பினை ஆரமாகப் பூண்ட செவ்வியோன் சிவலிங்கத்துள் மறைந்தருளினன். சாலோகாதி பதமுத்திகள் பெறுவோர் இருவகையர் ஆவர். மீளத்தோன்றிப் படிவழியே அடுத்தடுத்த பெரும்பதத்தான் முத்தி பெறுவர் ஒருவகையர். காலம் வருமளவும் ஆண்டே யிருந்து முத்தி சேர்வர் மற்றொரு சாரார். சிவி என்னும் இந்திரன் கணநாதர்க்குத் தலைவனாயிருந்து அக்கணநாதர்களைப் போலக் காலாந்தரத்தில் திருவடி கூடும்பேறு பெற்றனன். அற்றைநாள் முதல்அச் சூழல் இந்திர புரமாம் அங்கண் கற்றைவார் சடையீர் ஓர்கால் கண்ணுறப் பெற்றோர் தாமும் வெற்றிவேற் காலன் றன்பால் விரவிடார் கருவில் எய்தார் இற்றதன் பெருமை முற்றும் யாவரே இயம்ப வல்லார். 56 | |