பக்கம் எண் :


156காஞ்சிப் புராணம்


     நீண்ட சடைமுடியினையுடைய முனிவரர்களே ‘அந்நாள் முதலாக
அவ்விடம் இந்திரபுரம் என்னும் பெயருடைய தாகும். அதனைக்காணும்
பேறு பெற்றோரும் வெற்றி வேலையுடைய காலன் கைப்படார்; மேலும்
பிறப்பெய்தார் அதன் பெருமையை இவ்வளவினது என்று முற்றும்
வரையறுத்துக் கூற வல்லார் யாவர்.

சத்திய விரதம் காரைத் தருவனஞ் செறித லாலே
சித்திசேர்ந் தவர்க்கு நல்குந் திருநெறிக் காரைக் காடென்
றித்திருப் பெயரின் ஓங்கும் என்பரால் மாசு தீர்ந்த
உத்தமக் கேள்வி சான்ற உணர்வுடை உம்பர் மேலோர்      57

     குற்றத்தினின்று நீங்கிய தலைமை அமைந்த கேள்வியின் மிக்க
அறிவினையுடைய மேன்மக்கள் சத்திய விரதம் என்னும் தலம் காரை
மரங்கள் செறிதலாலே சேர்ந்தவர்க்குச் சித்தி நல்குந் திருநெறியையுடைய
காரைக்காடு என்று இத்திருப்பெயரின் உயர்ந்து விளங்கும்.

     அருள் நெறி, திருநெறி, ஒளி நெறி, பெருநெறி என்பன சிவ
ஞானத்தைக் குறிக்கும்.

திருநெறிக் காரைக்காட்டுப் படலம் முற்றுப் பெற்றது

ஆகத் திருவிருத்தம் 501

காலப் பிரமாணம்.

     நிமிஷம் பதினைந்து கொண்டது ஒரு காஷ்டை; காஷ்டை முப்பது
கொண்டது ஒருகலை. கலை முப்பது கொண்டது ஒரு முகூர்த்தம்.
முகூர்த்தமென்பது இரண்டு நாழிகை. முகூர்த்தம் முப்பதுகொண்டது பகலும்
இரவுங் கூடிய ஒருநாள், நாள் பதினைந்து கொண்டது ஒரு பக்ஷம், பக்ஷம்
இரண்டு கொண்டது ஒரு மாசம். மாசம் ஆறுகொண்டது ஒரு அயனம்.
அயனம் இரண்டுகொண்டது ஒரு வருஷம். மக்கள் வருஷம் ஒன்று
தேவர்களுக்கு ஒரு நாளாம். தேவர்களுக்கு உத்தராயணம் பகலும்,
தக்ஷிணாயனம் இராத்திரியுமா யிருக்கும். மனுஷவருஷம் முந்நூற்றறுபது
கொண்டது தேவர்களுக்கு ஒரு வருஷமாம். தேவ வருஷம் பன்னீராயிரங்
கொண்டது ஒரு சதுர்யுகமாம்.

     யுகம்.          தேவ வருஷம்.     மக்கள் வருஷம்
   கிருதயுகம்              4800               17,28,000
   திரேதாயுகம்            3600               12,96,000
   துவாபரயுகம்            2400               8,64,000
   கலியுகம்                1200              4,32,000


   சதுர்யுகம்               12,000              43,20,000