பக்கம் எண் :


புண்ணியகோடீசப் படலம் 159


     பிரமனுடைய கற்பங்களுள் ஒன்றாகிய மேகவாகன கற்பத்தில்
ஏழ்தலமும் புகழும் நாரணன், பிரமன் முதலாக ஏழுலகினையும் அவற்றிடைச்
சர அசரங்களையும் படைக்கும் விருப்பினால் தேவ தேவனைப் பல நாள்
மேகத்தின் வடிவங்கொண்டு தாங்கினான்.

     ஓரோர் கற்பம் நிகழும் ஓர் நிகழ்ச்சியால் பெயர் பெறும்; காட்டு;
‘சுவேதவராக கற்பம்’ (வெள்ளைப் பன்றி வடிவு திருமால் கொண்ட வரலாறு
பின்வரும்)

நம்மான் இரங்கிக் கடைக்கண் அருள் நல்கி மாலோய்
வம்மோசுரர் ஆண்டினில் ஆயிர ஆண்டு மற்றிங்
கிம்மேக உருக்கொடு தாங்கினை எம்மை வேண்டும்
அம்மாவரம் நல்குதும் ஓதுதி என்ன அன்னோன்.    4

     நம்பெருமான் திருவுளமிரங்கித் திருக்கடைக்கண் பார்வையைச்
சாத்தி, ‘மாலே, வாராய் தேவ அளவையில் ஆயிரவருடம் இவ்விடத்தில்
இம்மேகவடிவங்கொண்டு தாங்கினை. எம்மை, வேண்டுகின்ற
அப்பெருவரங்களைத் தருவோம் சொல்’ என, அத்திருமால்,

     வம் என்று ஒருமையில் வந்து, மோஎன்னும் முன்னிலை அசையை
ஏற்றது.

எந்தாய்ஒரு நின்திரு மேனி இடப்பு றத்து
வந்தேன் அடியேன் உயர்நின்அருள் வண்மை தன்னால்
நந்தாதஇவ் வாழ்க்கையும் எய்தினன் ஞாலம் முற்றும்
பைந்தாள்மல ரோனையும் இன்று படைத்தல் வேட்டேன்.   5

     எந்தையே, அடியேன் நினது திருமேனியில் இடப்புறத்துத்
தோன்றினேன். உயர்ந்தநின் அருட்கொடையால் கெடாத இவ்வாழ்வும்
பெற்றனன். உலக முழுதுடன், பசியநாளமுடைய தாமரை மலரை
இருக்கையாகக் கொண்ட பிரமனையும் சிருட்டிசெய்தலை விரும்பினேன்.

     எந்தாய்-என்றந்தை என்னும் பொருளுடன், நின் திருமேனியில்
வந்தனன் என்பதற்கேற்ப எம் தாய் எனும் நயம் எண்ணுக.

அவ்வாற்றல் அளித்தரு ளென்னும் அரிக்கு நாதன்
இவ்வாற்றல் கச்சிப் பதிஎய்தி இலிங்கந் தாபித்
தொவ்வாநளி னங்களி னாலுயர் பூசை ஆற்றின்
செவ்வேபெறு கிற்பை எனத்திரு வாய்ம லர்ந்தான்.      6

     படைக்கும் வலிமையைத் தந்தருள்க என்று கூறும் திருமாலுக்குச்
சிவபிரானார் காஞ்சியை அடைந்து சிவலிங்கம் நிறுவித் தனக்கு ஒப்பில்லாத
தாமரை மலர்களினால் உயர்ந்த பூசனை செய்தால் அப்படைக்கும்
ஆற்றலைத் திருந்தப் பெறும் வன்மையை யுடைய ஆவாய் எனத்திருவாய்
மலர்ந்தருளினார்.