புகழமைந்த வேத நூல் முடிபினைத் தெளியுந் தூயவர்களுட் டலைவன் நீயே ஆகலின் பலமுறையும் உலகம் அனைத்தினையும் படைத்தும், காத்தும், அழிக்கும் எம்மையே நலம் மிகுததற்கு ஏதுவாகிய வழிபாட்டைச் செய்து முத்தியில் நண்ணும் என்று புல்லிய மயக்கம் நீங்க வாய்மொழி தந்தருளி ஆன்ம நாயகன் திருவுரு மறைந்தருளினன். ஓரோர் காலத்து ஓரோர் பகுதியைப் படைத்தல் முதலிய ஒன்றிரு செயல்களை வினைக்கீடாக இறைவன் ஆணையால் நடத்துவோர் முதல்வர் எங்ஙனம் ஆவர்? எக்காலத்தும் எல்லா உலகங்களையும் ஐந்தொழில் செய்தருளும் முதல்வனே தலைவன் எனவும் உணர்த்தியருளினர். நாயகன் கிளந்த எல்லாங் கேட்டுளம் நடுங்கி அஞ்சித் தீயனேன் அந்தோ கெட்டேன் என்இது செய்தேன் இந்நாள் ஏயும்இம் மடமைக் கேதி யாதென வியாதன் எண்ணி ஆயதோர் மூர்த்தம் எம்மான் அடியிணை சிந்தை செய்து. 43 | நாயகன் கூறிய யாவற்றையும் கேட்டு உள்ளம் நடுக்கமுற்று மேலும் அஞ்சிக் கொடியனேன் ஐயகோ! கெட்டேன்! என்னே! இது செய்தேன்! இப்பொழுதுதித்த இவ்வறியாமைக்குக் காரணம் யாதென வியாதன் ஊன்றி நினைத்து, ஓர் முகூர்த்த காலம் எமது பெருமான் அடியிணைகளைச் சிந்தையில் தியானம் செய்து. விருதுடைக் காசி வைப்பின் விச்சுவ நாதன் யார்க்கும் அருள்வது மெய்யே யாகும் ஆயினும் ஈங்கு வாழ்வார் தெருமரத் தேவர் கூடிஊறுகள் செய்ப என்ப இருவினை யுடையேன் இங்கு வைகுதற் கிடையூ றீதால். 44 | ஏனைய தலங்களினும் வெற்றியுடைய காசியில் விசுவநாதப் பெருமான் எவர்க்கும் திருவருளை வழங்குவது உண்மையே ஆகும். ஆனாலும் இவ்விடத்து வாழ்பவர் உள்ளங்கலங்கத் தேவர் கூடி நற்செய்கைகளுக்கு இடையூறுகள் செய்வர் என்று கூறுவர். நல்வினை தீவினைகளின் வயப்பட்ட யான் இவண் வதிதற்கு இடையூறிதுவாகும். இடையறு காசி மூதூர் தன்னினும் இருமை சான்ற இடையறாக் காஞ்சி மூதூர் எம்பிராற் கினியதாகும் இடைஒசி முலையாள் பாகன் கருணையால் எவர்க்கும் அவ்வூ ரிடைஇடை யூறொன் றின்றி முத்திவீ டெளிதின் எய்தும். 45 | இடைக்காலமாகிய ஊழியில் அழிகின்ற காசி என்னும் பழம்பெரும் பதியினும் போகமும், பரபோகமும் ஒருங்கமைந்த ஊழியினும் அழியாத காஞ்சி என்னும் பழம் பெரும்பதி எம் தலைவற்கு இனி துறைதற்கிடனாகும். இடையை வருத்துகின்ற கொங்கையினையுடைய உமையம்மையை இடப்பாகங்கொண்ட பெருமான் திருவருளால் யாவர்க்கும் அக்காஞ்சிமாநகரம் நன்முயற்சியின் இடையில் இடையூறு சிறிதும் இன்றி முத்தி வீட்டினை எளிதினில் எய்துவிக்கும். |