திவோதானன் என்னும் அசுரன் பொருட்டு இறைவன் ஓர் கால் காசியை நீங்கினன் எனவும், அங்ஙனம் காஞ்சியில் ஓர் காலும் நீங்காமையின் இடையறாக் காஞ்சி எனவும் கூறும். காசியின் இறப்ப முத்தி காஞ்சியை நினைப்ப முத்தி ஆசற உதவும் என்னும் அரும்பொருள் துணிந்து சிந்தை மாசுதீர் முனிவர் கோமான் விரைந்துமா ணாக்க ரோடும் தேசினால் திசைபோங் காஞ்சித் திருநகர் அடைந்தான் மன்னோ. 46 | காசியிற் சென்றங்கிறந்த வழியும் அங்ஙனமின்றிக் காஞ்சியை இருந்த இடத்தே நினைத்த அளவிலும் முத்தியைக் குற்றமற உதவும் என்று கூறும் அரிய நூற் பொருளை உறுதிபெற மதித்துச் சிந்தையில் குற்றந் தவிர்ந்த முனிவர் தலைவராகிய வியாசர் மாணவராகிய முனிவர் பலரொடும் எண்டிசையும் புகழ் பரவும் காஞ்சித் திருநகரை அடைந்தனன். வியாசர் சார்ந்தாசய விமலனை வழிபடல் திகழ்சிவ கங்கை யாடித் தேமலர் ஒருமா மூலப் பகவனை வழிபா டாற்றி மஞ்சள்நீர் நதியின் பாங்கர் நிகழ்மணி கண்ட நாத நெடுந்தகை நிருதி வைப்பில் தகவினால் இளைத்துச் சார்ந்தார் சார்பினான் றனைத்தா பித்து. 47 | விளங்குகின்ற சிவகங்கை எனப்பெறும் தீர்த்தத்தில் மூழ்கித் தெய்வத் தன்மை பரவிய ஒற்றைமா (ஏகாம்பரம்) வடியில் எழுந்தருளியுள்ள பகவனை வழிபாடியற்றி மஞ்சள் நீர் நதிக்கரையின் பக்கத்தில் அருள் திகழ்கின்ற மணிகண்டநாதப் பெருமான் தலத்திற்குத் தென் மேற்குத் திசையில் மெலிந்து அடைதற்குரிய தகவொடும் சார்ந்தார் சார்பினான் தனைப்பதிட்டை செய்து, விதியுளிப் பூசை யாற்றி விழைதகத் துதிக்குங் காலை மதிபொதி சடில மோலி வரதனும் மகிழ்ச்சி பொங்கி எதிரெழுந் தருளி வேண்டும் வரமெவன் இயம்பு கென்ன முதிர்பெருங் காதல் நீடி முனிவரன் வேண்டு கிற்பான். 48 | விதிப்படி பூசை செய்து விருப்பம் அமையத் துதி செய்யும் பொழுது இளம்பிறையை அணிந்த சடாமுடியுடைய வரதன் மகிழ்ச்சி மேலிட்டுத் திருக்காட்சி எதிரே தந்து ‘வேண்டும் வரம் யாது கூறுக’ என்றலும் முறுகி வளர்ந்த பேரன்பு தங்கி முனிவரருள் மேலோன் வேண்டுவான். ஐயனே இளைத்துச் சார்ந்தேற் கரும்பெறற் சார்பாம் இந்தத் தெய்வலிங் கத்து நாளும் செழித்துவீற் றிருந்து ஞாலம் உய்வகை அவர வர்க்கு வேட்டன உதவாய் நின்தாள் மெய்வகைப் பத்தி நாயேற் கருள் இவை வேண்டும் என்றான். 49 | |