பக்கம் எண் :


230காஞ்சிப் புராணம்


     ‘‘தலைவனே, மெலிந்து சார்ந்த அடியேனுக்குப் பெறுதற்கரிய பற்றுக்
கோடாம் இந்தத் தெய்வத் தன்மையுடைய சிவலிங்கத்தில் எந்நாளும்
தழைத்து வீற்றிருந்து உலகம் பிழைக்குமாறு அவரவர்க்கு விரும்பிய
பொருள்களை உதவுக; நின்னுடைய திருவடிக்கண் மெய்த்திறமாய பேரன்பை
நாயேனுக்கு அருளுக. இவை வேண்டுவல்’’ என்றனன்.

     அவ்வவர் தகுதிக்கேற்ப விரும்புவ வெவ்வேறாகலின் வேட்டன உதவி
என்றனர். ‘வேண்டும் பொருளிற்றலையிலது’ ஆகலின் என்க. அவா வானும்
அச்சத்தானும் அன்றி வழிபடும் பேறுமெய்ப்பத்தி என்க.

அவ்வரம் முழுதும் அந்நாள் வியாதனுக் கருளி எங்கோன்
பௌவநீர் உலகம் போற்றப் பைத்தபாம் பல்குற் செங்கேழ்க்
கொவ்வைவாய்க் களபக் கொங்கைக் குலவரைப் பிடியி னோடும்
செவ்விதின் வியாத சார்ந்தாச் சிரயமா இலிங்கத் துற்றான்.   50

     அவ்வரங்கள் அனைத்தையும் அப்பொழுது வியாசருக் கருள் செய்து
எம்பிரான் கடல்சூழ்ந்த உலகோர் துதிக்கப் பாம்பினது விரித்த படம்போன்ற
அல்குலையும், சிவந்த நிறமுடைய கொவ்வைக்கனிபோலும் இதழ்களையும்
களப மணிந்த கொங்கையினையும் உடைய மேன்மை பொருந்திய
மலையரையன் மகளொடும் நன்கு வியாச சார்ந்தாச்சிரய பேரிலிங்கத்துள்
விரவினன்.

முழுதுணர் கேள்வி சான்ற வியாதனே முறைமை மாறிப்
பழுதுபூண் டிவ்வா றெள்ளப் பட்டனன் என்னில் அன்னோ
வழுவறு நூல்ஒன் றானும் உள்ளவா றுணர மாட்டா
இழுதையோர் தெளிவர் கொல்லோ இருவருக் கரியான் உண்மை.

     முழுதும் உணர்ந்தும், கேட்டும் நிரம்பிய வியாசனே பிறழ்ந்து பழியும்
பாவமும் ஏற்று இங்ஙனம் இகழப்பட்டனன். என்றால், அந்தோ! குற்றமற்ற
நூல் ஒன்றாயினும் உள்ளபடி உணரும் வன்மை யில்லாத அறிவிலோர்
திருமால் பிரமருக்கறியப் படாதவன் உண்மையைத் தெளிவரோ.

சார்ந்தாசயப் படலம் முற்றிற்று.

ஆகத் திருவிருத்தம் - 750