சத்த தானப் படலம் கலிநிலைத் துறை சாத்திரம் வல்ல வியாதனை ஆண்டருள் சார்ந்தாரைக் காத்த பிரான்திறம் இங்கிது கட்டுரை செய்தேமால் ஏத்தரு மஞ்சள் நதிப்புடை ஏழ்முனி வோர்எந்தாய் சோத்தென ஏத்திய ஏழிட மேய வளஞ்சொல்வாம். 1 | சாத்திரங்கள் கற்று வல்ல வியாச முனிவரரை அடிமை கொண்டு அருளைச் சார்ந்தவரைக் காத்த பெருமான் கருணைத் திறத்தை இதுவரை உறுதி பெற உரை செய்தேம். உயர்வு கூறற்கரிய மஞ்சள் நதிக் கரையில் முனிவரர் எழுவர் ‘எந்தையே சோத்தம்’ எனத் துதித்தற்கிடனாகிய ஏழிடங்களில் இறைவன் எழுந்தருளிய பேற்றினைச் சொல்வாம். சோத்தம்-இழிந்தோர் செய்யும் அஞ்சலி. அத்திரி குச்சன் வசிட்டன் அருட்பிரு குப்பாசங் கைத்துயர் கௌதமர் காசிப ரோடங் கிராவென்றேழ் மெய்த்தவ ரும்பனி சூழ்இம யக்கிரி மேல்முன்னாள் உத்தம மான அருந்தவம் ஆற்ற லுறுகாலை. 2 | அத்திரி, குச்சன், வசிட்டன், அருளுடைய பிருகு, பாசப்பொருள்களின் உவர்த்து நீங்கி உயர்ந்த கௌதமர், காசிபர், அங்கிரா எனப் பெயரிய உண்மைத் தவமுனிவரர் எழுவரும் பனி சூழ்ந்த இமயமலையின் மேல் முற்காலத்து உத்தமமான அரிய தவத்தைச் செய்யும்பொழுது, பனி சூழ்தலின் இமயகிரி என்றாயது; இமம்-பனி. ஆயிதழ் அம்புய வாழ்க்கை நெடுந்தகை ஆங்கெய்தி நீயிர் விழைந்தமை கூறுமின் என்றலும் நேர்போற்றிப் பாயிருள் சீத்து விளங்கொளி கான்றெழு பானுப்போல் மீயுயர் தோற்ற முறுந்தவ வேந்தர் விளம்புற்றார். 3 | பிரமன் அவர் முன் தோன்றி நீவிர் விரும்பிய பொருளைக் கூறுமின் என்ற அளவிலே எதிர் வணங்கிப் பரவிய இருளைத் துரத்தி விளக்கொளியை வீசி எழுகின்ற சூரியனைப் போல மிக உயர்ந்த தோற்றமுடைய தவத்தினுக்கு வேந்தர்கள் விளம்புதலுற்றனர். முதுக்குறை வாளர் பெறத்தகு முத்தி அருட்செல்வம் மதிக்குறை வுற்றுழல் வோர்களும் மற்றெளி திற்கூடப் புதுக்கும் உபாயம் எமக்கரு ளென்ன மலர்ப்போதன் விதுக்குறை சூடி மலர்ப்பதம் ஏத்தி விரிக்கின்றான். 4 | |