பக்கம் எண் :


346காஞ்சிப் புராணம்


     ‘ஆதலின், கொடிய வினைத்தளையை அறுக்கும் இம் மேன்மை
பொருந்திய தலம் வன்மீக நாதம் என்று போற்றப்பெறவும், கண்டவர்
பிறப்பொழியவும் நீவரம் ஈவாயாக’ என விடையூர் அண்ணலும்,

தந்தனம் வரமெனச் சாற்றி நீங்கினான்
இந்திரன் மீண்டனன் இரும ருத்துவத்
தந்திரத் தலைவரால் எச்சன் றன்சிரம்
முந்துபோற் பொருத்தலும் முளரிக் கண்ணினான்.   17

     ‘தந்தோம் வரம்’ எனத் திருவாய் மலர்ந்து மறைந்தனர். இந்திரனும்
திரும்பினான். இருமருத்துவராகிய ஆயுள் வேதத் தலைவரால் திருமால்
தனது தலை முந்து போலப் பொருந்துதலும் பதுமாக்கனாகிய திருமால்,

தெய்வத்தின் வலியினாற் சென்னி பெற்றெழூஉக்
கொவ்வைச்செவ் வாய்உமை கூறன் தாள்தொழு
தவ்வத்தன் ஆணையால் அவியின் பாகம்அங்
குய்வித்தோர்க் கமைத்துத்தன் உலகம் புக்கனன்.    18

     இருதேவர் தம் வன்மையால் சிரம் பெற்றெழுந்து கொவ்வைக்
கனிபோலும் சிவந்த இதழ்களையுடைய உமையம்மை கூறனாகிய பிரான்
திருவடிகளைத் தொழுது அத்தந்தையின் ஆணை வழி அங்குப்பிழைப்பித்த
அவ்வைத்தியர்க்கு அவிப்பாகம் நியமித்துத் தனது வைகுந்த உலகிற்குச்
சென்றனன்.

இகழரு முகுந்தனே இந்த வாறிழி
தகவுற இடும்பையில் தங்கு நீர்மையால்
உலகருஞ் செல்வத்தை உடம்பை அல்லது
புகழினை விரும்பலும் போதத் துன்பமே.         19

     போற்றற்குரிய திருமாலே இங்ஙனம் தலையிழக்கும் இழிந்த நிலையை
அடையத் துன்பத்தில் தங்கும் இயல்பினால் அழிதலில்லாத பெருஞ்
செல்வத்தையோ, உடம்பையோ, அல்லது புகழினையோ விரும்புதலும்
மிகவும் துன்பமாம்.

வன்மீக நாதப் படலம் முற்றிற்று.

ஆகத் திருவிருத்தம் - 1124.