பக்கம் எண் :


348காஞ்சிப் புராணம்


     காணப்படும் இவ்வுலகம் யாரை முதலாக உடையது? நிலைபெற்ற
உலகம் எவனிடத்துத் தோன்றி ஒடுங்கும்? பல் உயிர்களின் ஆணவ மலத்தை
நீக்கி அருள் செய்கின்ற தலைவன் யாவர்? இதனைச் சாற்றுக என்றனர்.

ஐம்மு கத்தயன் அனைய காலையின்
மம்மர் நெஞ்சினான் மயங்கிக் கூறுவான்
இம்ம றைப்பொருள் யாரும் உய்வகை
நும்ம னக்கொள நுவலக் கேண்மினோ.           5

     ஐந்து முகங்களையுடைய பிரமன் மயக்கம் கொண்ட மனத்தினால்
அறிவு மயங்கிக் கூறுவான்; ‘வேத நுண் பொருளாகிய இதனை யாவரும்
அறிந்து பிழைக்கும்படி உங்களுடைய மனங்கொள்ளச் சொல்லுவன்; நீவிர்
கேண்மின்.’

‘‘உலகி னுக்கியான் ஒருவ னேஇறை;
உலகம் என்கணே உதித்தொ டுங்கிடும்;
உலகெ லாம்எனை வழிபட் டும்பர்மேல்
உலகி னைத்தலைப் படுங்கள் உண்மையே.        6

     ‘யான் ஒருவனே உலகினுக்கு முதல்வன். உலகம் என்னிடத்தே
தோன்றி ஒடுங்கும், உலகம் யாவும் என்னையே வழிபாடு செய்து முத்தியை
அடையும். இது சத்தியமே’.

     உம்பர் மேல் உலகம்; ‘வானோர்க் குயர்ந்த உலகம் புகும்’ (திருக், 346)
தேவர்க்கும் எட்டாத முத்திப்பேறென்க. கள்-அசை.

வேதங்கள் உரைத்தல்

கலிநிலைத் துறை

என்றான் விரிஞ்சன் அதுகாலையில் வேத மெல்லாம்
முன்றோன்றி அங்கண் மொழிகுற்றன முண்ட கத்தின்
வென்றோய் புராணம் பலசாத்திரம் வேதம் மற்றும்
குன்றான்ற வில்லான் றனையே முதல்என்று கூறும்.    7

     என்று கூறினன் பிரமன். அப்பொழுது வேதங்கள் எதிர்வந்து அவண்
மொழிய லுற்றன. தாமரை மலரில் இருப்பவனே! மேருமலையை அமைந்த
வில்லாக உடைய சிவபிரானையே வேதங்களும், புராணங்களும்,
பலசாத்திரங்களும், பிற நூல்களும் முதல்வன் என்று பேசும்.

‘‘அவனேமறு வற்ற பரம்பிர மம்பு ராணன்
அவனேமுழு துந்தரு காரணம் ஆங்கெ வர்க்கும்
அவனே இறைவன் தொழுவார்க்கருள் வீட ளிப்போன்
அவனே’’ என ஓதிவெவ் வேறும் உரைப்ப அங்கண்.   8