ஆயிரஞ் சூரிய மண்டில மெனக் கிரணங்களை விரிக்கும் வடிவுடைய சக்கரம் ஒன்றைச் சிருட்டித்தனர். ஒளிவிடும் அப்படையால் பொருகின்ற பெருவன்மை யுடைய சலந்தராசுரனாகிய உன் நாயகன் இறந்தனன். அதனைத் தூரத்தே நின்று கண்டஞ்சி மீண்டிவ்விடம் போந்தேன். என்ற வாய்மொழி கேட்டலுங் கொம்பரை இழந்த மன்ற லங்கொடி போற்கிடந் தலமரு மயிலை வென்றி வேள்படை துளைத்திட மெலிவுறு நெடியோன் சென்று பற்றினன் திருந்திழை குறித்திது செப்பும். 15 | என்று கூறிய மொழியைக் கேட்ட அளவிலே கொழுகொம்பை இழந்த மணமலர்க் கொடி போலக் கிடந்து மனமறுகும் மயில்போல் வாளை வென்றி வாய்ந்த மன்மதன் படை புண்படுத்திட மெலிவுறும் திருமால் சென்று கையைப் பற்றினர். திருந்திய இழையினை யுடையாள் உள்ளத் தொன்றைக் கருதிப் புறத்து வேறாகிய இதனைச் சாற்றுவாள். மன்னு கேள்வனை இழந்துளேன் வைகல்மூன் றகன்ற பின்னை நின்மனைக் கிழத்தியே ஆகுவல் பெரும என்ன வஞ்சித்து நீங்கினள் மனையகத் தெய்தி வன்னி புக்குயிர் விடுத்தனள் கற்பினில் வழாதாள். 16 | ‘பெருமானே! உயிர் நாயகனை இழந்தவளா யுள்ளேன். மூன்று நாள் கழிந்த பின்னர் நின்மனையாட்டி ஆவேன்’ என்ன நயமாகக் கூறி ஏமாற்றி மனைக்கண் புகுந்து கற்பினின்றும் பிறழாதவள் தீயினில் உயிரை மாய்த்தனள். உழுவலன்புடையளாகலின் ‘மன்னுகேள்வன்’ என்றனர். எழுமையுந் தொடர்ந்த அன்பு: இம்மைபிறப்பிற் பிரியலம்’ (திருக்.) அறுசீரடி யாசிரிய விருத்தம் ஏம்பலே டுறையும் மாயன் இத்திறம் உணர்ந்தான் அந்தச் சாம்பரிற் புரண்டு பேய்க்கோட் பட்டவர் தம்மின் மாழ்கித் தேம்பினான் அனையாள் செல்வத் திருஉரு உளத்தில் தீட்டி ஓம்பினான் என்செய் வான்அங் குழிதந்தான் நெடுநாள் இப்பால். | வருத்தத்தோடும் அகலா தங்கிருந்த மயங்கியமால் இவ்வகையை அறிந்தனன். அவளுடைய ஈமச் சாம்பலில் ஆழ்ந்து புரண்டு பேயாற் பற்றப் பட்டவர் தம்மைப் போல மனம் நொந்து மெலிந்தான். அவளது அழகிய வடிவை மனக்கிழியில் எழுதித் தியானித்தான். வேறு எவன் செய்ய வல்லன். அவ்விடங்களிலே நெடுங்காலம் திரிந்தனன். இனி, சிவபெருமான் திருவருள் செய்தல் இமையவர் பலரும் மாலை எங்கணுந் தேடிக் காணார் சிமையநீள் கயிலை நண்ணித் திருவடி வணங்கிக் கூற அமையெனத் திரண்டு நீண்டு பசந்தணி இலங்கு பொற்றோள் உமைஒரு பாகத் தெங்கோன் அவன்திறம் உணர்ந்து சொல்லும். | |