மென்றுணர்த் துளவந் தன்னை விருந்தையாத் துணிந்து புல்லிக் குன்றருங் கழுமல் நீங்கிக் குலவுதன் இருக்கை சார்ந்தான் துன்றுபூந் துழாய்முன் மூன்றுந் துவாதசி வழுத்தப் பெற்றோர்க் கன்றினர்க் கடந்த மாயோன் ஆரருள் சுரக்கும் மன்னோ. 22 | மெல்லிய பூங்கொத்துக்களையுடைய துளசிச் செடியை விருந்தையாகவே மதித்து இறுகத் தழீஇக் குறைவரிய மயக்கம் நீங்கி விளங்குகின்ற தனது வைகுந்தத்தைச் சேர்ந்தனர். செறிந்த பூந்துளவ முதல் மூன்றனையும் துவாதசி திதியில் போற்றிப் பயன் கொள்வோர்க்குப் பகைவரை அழித்து வெற்றி கொண்ட திருமால் பேரருளை வழங்குவர். சலந்தரன் முத்திபெறுதல் தடவரை இகந்த திண்தோள் சலந்தரன் கயிலை வெற்பில் விடமிடற் றிறையால் வீந்து வியனகர்க் காஞ்சி வைப்பில் படரொளிப் பிழம்பாய்த் தோன்றிப் பரசுதன் இலிங்க மூர்த்தத் துடனுறக் கலந்தான் அன்னோன் பெருமையார் உரக்க வல்லார். 23 | பெருமலையைத் தம் பெருமையால் வென்ற திண்ணிய தோள்களை யுடைய சலந்தராசுரன் கயிலை மலையில் திருநீலகண்டப் பெருமானால் இறந்து அகன்ற காஞ்சி நகரச் சூழலில் பேரொளி வடிவாய்த் தோன்றிப் பூசனை முன் புரிந்த சலந்தரேசச் சிவலிங்கத் துடனுறக் கலந்தான். அச்சலந்தரேசப் பெருமான் பெருமையை யாவர் உரைக்கவல்லவர். சலந்தரேசப் படலம் முற்றிற்று. ஆகத் திருவிருத்தம்-1463 திருமாற் பேற்றுப் படலம் அறுசீரடி யாசிரிய விருத்தம் வணங்குநர்க் கிருமைப் பேறும் மேன்மையின் வழங்கி எங்கோன் இணங்கிய சலந்த ரேச வரவினை எடுத்துச் சொற்றாம் அணங்கனார் ஆடல் பாடல் முழக்கறா அணிநீள் வீதிக் கணங்கெழு திருமாற் பேற்றுக் கடிநகர்ப் பெருமை சொல்வாம். 1 | வழிபடுவோர்க்கு இம்மை மறுமைப்பயன்களை நிரம்ப அருள் செய்து எங்கோன் வீற்றிருக்கின்ற சலந்தரேச வரலாற்றினை எடுத்துக் கூறினோம். மகளிர்தம் ஆடல் பாடல்களின் முழக்கம் இடையறாது நிகழ்கின்ற அழகிய நீண்ட வீதிகள் மருவிய திருமாற்பே றென்னும் காவலமைந்த நகரின் பெருமையைக் கூறுவோம். |