திருமால் சக்கரம்பெற வழிபடுதல் குவலயங் காவல் பூண்ட குபன்எனும் அரசற் காகச் சிவநெறித் ததீசி யோடுஞ் செருச்செய்நாள் விடுத்த ஆழி தவமுனி வயிர யாக்கை தாக்கிவாய் மடித லோடும் கவலுறு மனத்த னாகிக் கடுஞ்சமர் துறந்த மாயோன். 2 | நில மண்டிலத்தைக் காவல் மேற்கொண்ட குபன் என்னும் அரசன் பொருட்டுச் சைவராகிய ததீசி முனிவரோடும் திருமால் போர்செய்த காலைத் தூண்டிய சக்கரம் தவமுனிவரது வயிர யாக்கையில் தாக்கிக் கூர் மழுங்கினமையால் வருத்தம் மிகுந்து கொடிய போரைத் தவிர்ந்த அம்மால், இனிப்படை பெறுவ தெவ்வா றென்றுவா ளவுணர்க் காற்றாப் பனிப்புடை இமையோர் தம்மை உசாவினன் படைகட் கெல்லாம் தனிப்பெருங் குருவாய் ஈசன் சலந்தரன் மடியக் கண்ட சினப்பொறி சிதறுந் தீவாய்த் திகிரிஒன் றுளதென் றோர்ந்தான். 3 | அசுரர்தம் இடையூற்றைப் பொறாது நடுக்கங் கொள்ளும் விண்ணவரொடும் ஆராய்ந்து படைகளுக் கெல்லாம் ஒப்பருந் தலைமையதாய் சலந்தராசுரனை அழிக்கச் சிவபிரானார் படைத்த கோபத்தீப் பொறியைச் சிந்தும் கூர்மையையுடைய சக்கரம் ஒன்றுண்டென்று அறிந்தனன். உவகைமீ தூர விண்ணோர்க் கோதினன் இதனை வேண்டிச் சிவனடி பரசின் இன்னே திருவருள் சுரக்கும் என்னா அவரொடும் போந்து காஞ்சி அணிநகர் வடமேல் பாங்கர்த் துவர்இதழ் உமையாள் போற்றுஞ் சுடரொளி இலிங்கங்கண்டான். 4 | மகிழ்ச்சி மீக்கூர இதனைத் தேவர்க்குக் கூறினன். விரும்பிச் சிவபிரான் திருவடியைப் பராவுதல் செய்யின் இப்பொழுதே திருவருள் பாலிக்கும் என்றத் தேவரொடும் காஞ்சியை அடைந்து அழகிய நகரின் வடமேற்குப் பாங்கரில் சிவந்த அதரங்களையுடைய உமையம்மையார் வழிபடும் சுடரொளி இலிங்க மூர்த்தியைக் கண்ணுற்றான். சேயிழைக் கவுரி செங்கை தைவரச் சிவந்து தோன்றிப் பாயொளிப் பவளக் குன்றர் எனப்பெயர் படைத்து நான்காம் ஆயிரம் உகங்கள் அங்கண் அருந்தவர் வழுத்த வைகு நாயனார் தமைக்காண் தோறும் நாரணன் இறும்பூ துற்றான். 5 | சிவந்த அணிகளையுடைய உமையம்மையார் செந்தாமரை மலர்க்கை வருடச் சிவந்து விளங்குதலால் பரவிய ஒளியுடைய பவளமலையார் எனத் திருநாமம் பூண்டு ஆயிரம் சதுர்யுகங்கள் அங்குச் செயற்கரிய தவஞ் செய்வோர் துதி செய்ய வீற்றிருக்கும் நாயனார் தம்மைக் கானுந்தோறும் நாரணனார் வியந்தனர். |