பக்கம் எண் :


521


     நீரை இடங்கொள்ளும் மச்ச வடிவு கொண்ட தன் பெயர்பூண்ட
மச்சேச லிங்கம் தாபித்து அன்பொடும் அருச்சனை விளங்கச் செய்து
அருளைப்பெற்றுத் திரண்ட செல்வங்களை வழங்கு மரக்கலங்கள் மிகுகின்ற
கடலில் மூழ்கினார்.

சோம கன்றனை அட்டுச் சுருதிகள்
மாம றைக்குலத் தார்க்கு வழங்கினான்
நாம நீர்க்கடல் நாகணைப் பள்ளிமேல்
தாம ரைக்கண் வளருந் தகைமையான்.            8

     அச்சந்தரும் பாற்கடலில் ஆதிசேடனாகிய படுக்கையில் தாமரை
மலரை யொக்கும் கண்கள் அறிதுயில் கொள்ளும் பண்புடைய மச்சாவதார
மூர்த்தி சோமகாசுரனைக் கொன்று வேதங்களைப் பெருமை பொருந்திய
வேதியர்க்கு அளித்தனர்.

சங்கம் நேர்உருப் பஞ்ச சனப்பெயர்
வெங்க ணானையும் ஆயிடை வீட்டியே
துங்க ஓசை வலம்புரித் தோற்றமாம்
அங்க வன்றன் எலும்பை அணிந்தனன்.           9

     சங்கொக்கும் வடிவுடைய பஞ்சசன் எனப் பெயருடைய கொடி
யோனையும் அவ்விடத்தே அழித்து உயர்ந்த ஒலியுடைய வலம்புரிச்
சங்கினை ஒக்கும் அவனது எலும்பைக் கைக்கொண்டனர்.

கச்சி மாநகர் வைப்பிற் கருந்துழாய்
மச்சம் அர்ச்சித்த மச்சலிங் கத்தினை
நச்சி ஏத்துநர் தாம்பெறு நன்னலம்
இச்ச கத்தெவர் இற்றென் றளப்பரே.              10

     காஞ்சி மாநகரை அடைந்து பெருமை பொருந்திய துளசிமாலையை
அணிந்த மச்சாவதார மூர்த்தி அருச்சித்த மச்சலிங்கப் பெருமானை விரும்பிப்
புகழ்ந்த போற்றுநர் தாம் பெறுகின்ற பெருநலங்களை இவ்வுலகில் யாவர்
இவ்வளவிற் றென்று வரையறுத்துக் கூற வல்லவர்?

மச்சேசப் படலம் முற்றிற்று.

ஆகத் திருவிருத்தம்-1765

அபிராமேச்சரப் படலம்

கலி விருத்தம்

காவு சூழக் கஞலிச் சுருப்பினம்
மேவு மச்சலிங் கேசம் விளம்பினாம்
வாவி மல்கும் அதன்வட மேற்றிசைத்
தாவில் சீர்அபி ராமேச் சரஞ்சொல்வாம்.          1