பக்கம் எண் :


522காஞ்சிப் புராணம்


     சோலையில் வண்டினங்கள் மேன்மேல் நெருங்கி மொய்க்கும்
மச்சலிங்கேச வரலாற்றைக் கூறினோம். இனி, பொய்கைகள் நிரம்பிய அதன்
வடமேற்குத் திசையில் குற்றமற்ற சிறப்பினையுடைய அபிராமேச்சரத்தின்
பெருமையைக் கூறுவோம்.

மேற்படி வேறு

மாவலி எனப்பெயர் மரீஇய தானவர்
காவலன் உலகெலாங் காத்த ளிக்கும்நாள்
தேவர்கட் கிறையவன் அரசு தேய்தலின்
யாவது செயல்எனக் கினியென் றெண்ணுழி.       2

     மாவலி என்னும் அசுரர்க்கு அரசன் உலகமெல்லாவற்றையும் காவல்
செய்யும் நாளில் தேவர்களுக்கரசனாகிய இந்திரன் அரசாட்சி மெலிதலின்,
இனியான் என் செய்வேன் என்று அத்தேவர்கோன் தளருங்காலை,

செந்தளிர் மலரடித் திருவின் நாயகன்
இந்திரற் கிளையவன் என்னக் காசிபன்
மைந்தனாய்க் குறள்உருத் தாங்கி மன்னினான்
முந்தையோர்க் கரசியல் உதவ முன்னியே.        3

     செவ்விய தளிரை ஒக்கும் மலர்போலும் அடியினையுடைய திருமகளுக்கு
நாயகராகிய திருமால் இந்திரனுக்குப் பின் பிறந்த உபேந்திரனாகக் காசிப
முனிவர்க்கு மைந்தராய்க் குறுகிய வடிவு கொண்டு தோன்றினர். அதிதியின்
பால் தமக்கு முன்னர்த் தோன்றிய தேவர்களுக்கு அரசச் செல்வத்தை உதவ
எண்ணியே.

அலங்கொளிக் காஞ்சியின் அபிரா மேச்சர
இலிங்கம்அங் கியல்புளி வழிபட் டேத்தினான்
வலம்பெறச் சிலபகல் வைகிக் கங்கைநீர்
சிலம்புவே ணியன்அருள் செய்யப் போந்தனன்     4

     விட்டிமைக்கும் ஒளியினையுடைய காஞ்சியின் கண் அபிராமேச்சரச்
சிவலிங்கத்தைத் தாபித்து விதிப்படி வழிபாடு செய்து துதித்தனர் மாவலியை
வெல்லும் வலிமையைப் பெறச் சிலநாள் அங்குத் தங்கி வழிபட்டுக் கங்கை
நீர் ததும்புகின்ற சடைமுடிப் பெருமானார் அருளுதலைச் செய்யப்பெற்று
மீண்டனர்.

வெய்யவாள் அவுணர்கோன் வேள்விச் சாலையின்
எய்திமூ வடிநிலம் இரந்து வேண்டினான்
கைதவம் உணர்ந்தெதிர் தடுத்த காழ்படு
மையறு வெள்ளியை விழியை மாற்றினான்.         5