புண்ணியப் பூம்புனல் ஆட்டிப் போர்விடை அண்ணலைத் தொழுதுல களந்த பேருருக் கண்ணுதல் மகிழ்வுறக் காட்டிப் பூந்துழாய்ப் பண்ணவன் ஆயிடைப் பணியின் மேயினான். 9 | புண்ணியத் தீர்த்த நீரைக் கொண்டு திருமுழுக் காட்டிப் பொருதலை யுடைய விடையூரும் அண்ணலை வணங்கி உலகங்களை அளந்த பெருவடிவினை நுதற்கண்ணுடைய பிரானார்க்கு மகிழ்ச்சிகூரக் காட்டித் திரிவிக்கிரம மூர்த்தியாய் அவ்விடத்தே திருத்தொண்டில் ஈடுபாடுடையர் ஆயினார். அபிராமேச்சரப் படலம் முற்றிற்று. ஆகத் திருவிருத்தம்-1774 கண்ணேசப் படலம் கலி விருத்தம் வாம னப்பெயர் மாணி தொழும்அபி ராம நாத வரைப்பு விளம்பினாம் நாம நீர்த்தடங் காஞ்சி நகர்வயின் ஏமம் மாண்டகண் ணேசம் இயம்புவாம். 1 | வாமனன் என்னும் பிரமசாரி வணங்கிய அபிராம நாதேசம் கூறினோம். இனி, அச்சந்தரும் நீர்ப்பொய்கை கொண்ட காஞ்சிமா நகரில் இன்பம் மிக்க கண்ணேசத்தைக் கூறுவோம். கடல்உ யிர்த்த கடுவிடந் தாக்கிமுன் உடலெ லாங்கரி வுற்று வெதும்பலால் படஅ ராவணைப் பண்ணவன் மாழ்கிஅவ் விடம்அ யின்ற விமலனைப் போற்றுவான். 2 | திருப்பாற் கடல் உமிழ்ந்த கொடிய விடம் தாக்கித் திருமால் முன்னர் மேனி முழுதும் கரிந்து வெப்ப முறுதலான் வருந்தி அவ்விடத்தை உண்டு உலகைக் காத்த அமலனைப் போற்றுவார். கச்சி எய்தினன் கண்ணலிங் கத்தினை நச்சி அன்பின் நிறீஇநயந் தேத்தினான் பச்சை மென்கொடி பாகன் கருணைகூர்ந் திச்சை யாது விளம்புதி என்றலும். 3 | |