வருகின்ற இருவினைகளை அழிக்கின்ற மாசாத்தர் வழிபட்ட திருக்கோயில், விளக்கமமைந்த மங்களேசம், இராமேசம், மாதலீச்சரம் ஆகிய இத்தலங்களை விளங்கக் கூறினோம். பஞ்சதருக்களின் மலர்கள் நிரம்பிய திருவாயிலையுடைய மாதலீச்சரத்தின் மேற்றிசையில் நீங்குதல் இல்லாதான் இயல்பினைக் கூறுவோம். இறைவன் இறைவியர் திருவிளையாடல் எண்ணரும் உயிர்கள் ஈன்ற இருமுது குரவ ரானோர் அண்ணலங் கயிலை வெற்பின் அமர்வுழி ஒருநாள் அங்கண் உண்ணிறை களிப்பின்நீடி ஒள்ளொளி மணிச்சூ தாடக் கண்ணினர் அகிலம் உய்யக் கண்ணினார் அனைய காலை. 2 | அகிலமும் உய்யும் கருந்துடையோராகிய எண்ணரிய பல்லுயிரையும் ஈன்ற அம்மையப்பராயினோர் தலைமைசான்ற கயிலைமலையிற் வீற்றிருக்கையில் ஓர் நாள் அவ்விடத்து திருவுள்ளத்தில் நிறைந்த பெருங்களிப்பில் சுடரொளியுடைய மணிகளான் இயன்ற பாய்ச்சிகையையும், காயையும் கொண்டு சூதாடக் கருதினர், மாலையந் துளவோன் எய்தி வணங்கிச்சாந் தாற்றி கோடல் மாலைய னாகி நின்று மெய்வெயர் மாற்ற நோக்கி மாலைவெண் பிறைதாழ் வேணி வள்ளலும் உமையும் ஆங்கண் மாலைஅவ் வினைக்குச் சான்று வைத்தனர் ஆடி னார்கள். 3 | திருமால் அணுகி வணங்கி விசிறி கொள்ளுந் தன்மையனாகி நின்று திருமேனி வெயர்வையை மாற்றக் கண்டு மாலையிற்றோன்று கின்ற வெள்ளிய பிறை தங்கிய சடையுடைய வள்ளலும் உமையம்மை யாரும் அங்கு மாயனாரை அச்சூதினைக் கண்காணிப்பவராக வைத்து ஆடினார்கள். பிடித்தெறி கவறாட் டத்திற் பிஞ்ஞகன் தோற்பச் செங்கேழ் அடித்தளிர்ப் பிராட்டி நோக்கிஅடிகளை வென்றேன் என்றாள் விடைக்கொடிப் பெருமான் யாமே வென்றனம் என்றான் பாசம் உடைத்தவர் தங்கட் கிவ்வா றுற்றன கலாங்கள் மேன்மேல் 4 | சூதாடு கருவியை உருட்டுகின்ற ஆட்டத்தில் பெருமான் தோல்வியடையச் செந்நிறம் பொருந்திய மாந்தளிரை ஒக்கும் திருவடியுடைய பெருமாட்டியார் கண்டு ‘அடிகளை வென்றேன் யான்’ என்றனர். விடைக்கொடியை உடைய பெருமனார். ‘யாமே வென்றோம்’ என்றனர், இயல்பாகப் பாசங்களினீங்கிய இவர் தமக்கு மாறுபாடு இங்ஙனம் மேன்மேல் முதிர்ந்தன. |