அவன் பெயர்க்கப் பெறானாய் முழுவலிமையையும் வாலில் வைத்துச் சுற்றி இழுத்து வால் அறுந்து தொலைவில் அரற்றி வீழ்ந்தான். வீழ்ந்தவன், எழுந்து வந்து மென்மல ரடிகள் போற்றித், தாழ்ந்தெழுந் தடியேன் இல்லந் தனில்எழுந் தருளிச் சூடும், போழ்ந்தவெண் மதியாய் செய்யும் பூசைகொண் டருளாய் என்று, சூழ்ந்துநின் றிரந்து வேண்டத் தோன்றிமுன் இதனைச் சொன்னேம். 118 பின்பு வணங்கித் தன் இருக்கைக்கு எழுந்தருள வேண்ட எதிரெழுந்தருளி இதனைக் கூறினோம். கச்சிமூ தூரின் நீங்காக் காதலம் எம்மை ஈண்டே அர்ச்சனை புரிதி நின்வால் அழுந்திய தழும்பு பூண்டு சச்சைவெண் ணீற்று வாலீச் சரனென விளங்கித் தோன்றி முச்சகம் பரச வாழ்தும் எனமொழிந் திலிங்கத் துற்றேம். 119 | கச்சியின் அகலாத காதலையுடையேம். ஆகலி்ன், எம்மை இவ்விடத்தே அருச்சனை செய், நின் வாலின் சுவடு பூண்டு செச்சையாகிய வெண் ணீற்றினை அணிந்த வாலீச்சரனென விளங்கி வீற்றிருந்து மூவுலகும் போற்றி அருள்பெற இருப்போம் எனஅருளிச் சிவலிங்கத்தில் ஆனேம். அன்றுதொட் டனைய சூழல் அற்புதத் திருவா லீசம் என்றொரு பெயரின் ஓங்கும் ஏரிழாய் பஞ்ச தீர்த்த மன்றநீர் வாவி மூழ்கி வகுத்தஇப் பஞ்ச லிங்கம் நன்றுகண் டேத்தப் பெற்றோர் நலிவினைப் பிறவி தீர்வார். 120 | அழகிய அணிகளையுடையோய்! அந்நாள் முதலாக அத்தலம் ஞானத் திருவை நல்கும் வாலீசம் என் றொப்பற்ற பெயரினால் சிறக்கும், பஞ்ச தீர்த்தத்தில் மூழ்கி வகுத்துரைத்த இப்பஞ்ச லிங்கத்தினை பெரிதும் கண்டு துதிக்கப் பெற்றோர் நிச்சயமாக வருத்துகின்ற வினையாலமைந்த பிறவி நோய் நீங்குவர். இன்னணம் அருளிச் செய்து பொலங்குவட் டிமயம் பூத்த மின்னொடும் மூவ ரோடும் விளங்கொளித் திருவே கம்பந் தன்னிடைக் கரந்து நின்றான் சதாசிவப் புத்தேள் அந்த நன்னகர்ப் பெருமை முற்றும் யாவ்ரே நவில வல்லார். 121 | இவ்வாறருளி இமய மின்னாகிய அம்மையோடும், மும்மூர்த்திகளோடும் விளங்கும் அருளொளித் திருவேகம்பப் பெருமான் திருவுருவில் மறைந்தருளினர் சதாசிவமூர்த்தி. பெருமான் அருளிய திருவேகம்பத் தலத்தின் பெருமையை எவரே முற்றவும் பேசவல்லவர் ஆவார்; ஒருவரும் இலர். திருவேகம்பப் படலம் முற்றிற்று. ஆகத் திருவிருத்தம்-2022 |