பக்கம் எண் :


592காஞ்சிப் புராணம்


தழுவக் குழைந்த படலம்

எண்சீரடி யாசிரிய விருத்தம்

     கம்ப மால்கரி உரித்தவர் சிரமேற் கம்ப தித்தவர் பசும்பொழில்
தலத்துக், கம்ப லம்விரித் தெனமலர் பரப்புங் கம்பம் மேவிய
தொருசிறி துரைத்தாம், கம்ப லைத்ததிர்த் தெழுந்துமீக் கடுகுங்
கம்பை மாநதிப் பெருக்கினைக் காணூஉக், கம்பம் உற்றுமை
தழுவமெய் குழைந்த கருணை மேன்மையுங் கட்டுரைத் திடுவாம்.    1

     அசைதலையுடைய மத மயக்கம் கூடிய களிற்றினை உரித்ததன்
தோலைப் போர்த்தவரும், சென்னிமேல் நீரை வைத்தவரும் ஆகிய
திருவேகம்பருடைய பசிய சோலை சூழ்ந்த தலத்தில் கம்பலத்தை
விரித்தாற்போல மலர்களைப் பரப்புதற்கிடனாகிய திருவேகம்பத்தின்
வரலாற்றினை ஒரு சிறிதே உரைத்தோம். இனி, ஆரவாரித்து அதிர்ச்சியை
ஊட்டி மேன்மேலெழுந்து விரைந்து வரும் கம்பா நதிப் பெருக்கினைக்
கண்டு நடுக்கம் எய்தி உமையம்மையார் தழீஇக் கொள்ளத் திருமேனி
குழைந்து சுவடு பூண்ட திருவருட் சிறப்பினையும் மிக்கெடுத்தோதுவோம்.

பிரமன் செயல்

     பொற்ற தாமரைப் பொகுட்டணைக் கிழவன் புகுத லுற்றதற்
புருடகற் பத்தில், பற்றும் வைகறைத் துயிலொழிந் திமயப் பாவை
பாகனார் அடிதொழு தெழுந்தான், முற்றும் வெள்ளநீர்ப் பரப்பிடை
அவனி முழுதும் ஆழ்ந்தது கண்டுளங் கவன்று, மற்றினிச்சக
அகிலமும் படைக்கும் வண்ணம் யாதென மயங்குறும் பொழுது.     2

     பிரமன் தற்புருட கற்பத்தின் வைகறையில் துயிலொழிந்து
மங்கைபங்கனார் திருவடிகளை வணங்கிக் கொண்டெழுந்தனன். நீர்ப்
பரப்பில் உலகெலாம் அழுந்தியதனைக் கண்டு மனக்கவலையுற்று இனி
அகில உலகங்களையும் படைக்கும் வழி யாதென மயங்கும் காலை,

     பிரமன் துயிலெழுந்தமையால் இது நித்திய கற்பம் ஆம்.

     பூதி மேனியார் திருவருள் கூடிப் புரிந்த முன்நிகழ் உணர்ச்சி
வந்தெய்த, ஆதி கற்பத்தில் எதிர் எழுந்தருளி அண்ண லார்கற்பந்
தொறுந்தொறும் நின்பால், சோதி சேர் எழிற் குமாரநல் வடிவால்
தோன்றி நாம்உனக் கருளுதும் என்னாப், பேதி யாவகை தனக்கு
முன் அளித்த பெருவ ரத்தினைத் தெளிந்தனன் பிரமன்.         3

     மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த பெருமானார் முதற் கற்பத்தில்
பிரமனை நோக்கி கற்பந்தோறும் ஒளியும் அழகு மமைந்த குமார வடிவில்
நின்னிடத்துத் தோன்றிச் சிருட்டித் தொழிலை அறிவுறுத்துவோம்
என்றருளிய வரத்தினை அவரருளால் உணர்ந்தனன் பிரமன்.