என்று வரலாறு கூறிய சூதமா முனிவரைத் தவ சிரேட்டர்கள் பெரிதும் போற்றி செய்து வருந்தும் ஐம்பொறிகளின் கொடுமையை அடக்கிய பெருந்தகையே! விண்டு வீச்சரம் வந்தவா றியாது? நீவிர் அதனை விரித்துரைத்தல் வேண்டுமென வினாவலும் அதற்கு விடைபகர்வார். அள்ளி லைப்படைக் கடவுளர்க் காரமு தளிக்கும் வெள்ளி வெண்டிரை வரிகடல் வரைப்பினில் மாயோன் முள்ளெ யிற்றரா வணைமிசை நாடகம் முயலும் வள்ள லாரடி மனத்திடைத் தழீஇயினன் துயில்வான். 151 | கூரிய இலைபோலும் படைக்கலங்களையுடைய தேவர் தமக்குப் பெறற்கரிய அமுதத்தை வழங்கும் திருமால் திருப்பாற்கடலில் முள்ளைப் போலும் கூரிய பற்களையுடைய பாம்பணைமேல் ஐந்தொழில் புரிதலாகிய திருக்கூத்தினைச் செய்யும் கைம்மாறு கருதாத வள்ளலார் திருவடிகளைத் தன்னுள்ளத்துட்கொண்டு அறிதுயிலுற்றனர். அனைய தன்மையின் அறிதுயில் அமர்பவன் ஒருநாள் கனைவி ளங்கொளி இதயமென் கவிழ்நனைக் கமலந் தனைம லர்ந்துமேல் நோக்குறச் செய்தனன் தணவா வினைஇ கந்துயர் யோகினால் வளிமிசை எழுப்பி. 152 | கூத்தப் பெருமான் திருவடிகளை மனங்கொண்டு யோகநித்திரை யிலிருக்கும் திருமால் ஒரு நாள் நெருங்கி விளங்குகின்ற ஒளியுடைய இருதயமென்னும் கீழ்நோக்கிய தேனுடைய தாமரையை ஒருகாலும் விட்டு நீங்காத வினை ஒழிந்து உயர்தற்கு ஏதுவாகிய சிவயோகத்தினால் பிராணவாயுவை மேலே எழுப்பி அதனால் அத்தாமரையை மலர்ந்து மேலே நோக்கியிருக்கச் செய்தனர். பகரும் உந்தியின் மேலிடத் தலரும்அப் பதுமத் திகழ ருந்திறத் திலங்குநுண் குகையத னிடத்து நுகரும் ஊண்பகுத் தமருநோன் தழல்அதன் தலையில் திகழ மேவரும் நுணங்குபூஞ் சிகையதன் நடுவண். 153 | பேசப்பெறும் கொப்பூழின் மேலிடத்தில் மலரும் அத்தாமரைக் கண் புகழ்தற்குரிய திறத்தினால் பொலிவுறும் தகராகாசம் என்னும் சிற்றம்பலத்தில் நுகரும் நுகர்ச்சிகளைப் பிரித்து ஊட்டி வீற்றிருக்கும் நற்சுடரின் உச்சியில் விளங்கும் நுண்ணிய பூஞ்சிகையின் நடுவிடத்தே. சாற்று மெய்ப்பரப் பிரமமாம் சதாசிவப் புத்தேள் வீற்றி ருப்பது யோகத்திற் கண்டனன் விரைத்தேன் ஊற்று பூந்துழாய்ப் பண்ணவன் உவகையின் வல்லே போற்றி போற்றிஎன் றிறைஞ்சினன் அன்புமீப் பொங்க. 154 | |