விரித்து விளக்கப்பெறும் உண்மைப் பரப்பிரமமாகிய சதாசிவ மூர்த்தி எழுந்தருளி இருத்தலைச் சிவயோகத்தினால் பார்த்தனர். நறுமணங்கமழும் தேனைச் சிந்துகின்ற துளவ மாலையையணிந்த திருமால் தரிசித்த மகிழ்ச்சியால் விரைவாக அன்பு மேலெழப் போற்றி போற்றி என்று துதித்து வணங்கினார். அன்பி னுக்கெளி யார்பெருங் கருணைகூர்ந் தருளி இன்ப ஆனந்தத் திருநடம் ஆயிடை இயற்ற வன்ப ழம்பகை மலஇருள் கடிந்தது காணூஉ என்பு நெக்குநெக் குருகினான் முரனைஅன் றிறுத்தோன். 155 | முராரியாகிய திருமால் அன்பினுக்கெளிவந்தருளும் பெருமானார் மிக்க அருளுடையவராய்ப் பேரின்பத்தைத் தோற்றுவிக்கும் ஆனந்தத் திருநடனத்தை இருதய தாமரையின் கண்ணே நடித்தருள அனாதியாய் வலியபகையாயுள்ள ஆணவமல இருள் சிறிதும் இல்லையாய் ஒழிந்ததைப் பார்த்து என்பும் நெகிழ்ந்து நெகிழ்ந்து உள்ளம் உருகினார் புளகம் எங்கணும் போர்த்துமெய் பனித்துவாய் குழறி இளகி இன்பநீர் விழியுகக் கம்பனம் எய்தித் தளர்வில் ஆர்வத்தால் தனைமறந் தறிதுயில் மேவும் அளவில் ஆங்கயல் இருந்தவர் அன்னது கண்டார். 156 | மயிர் சிலிர்த்தும், திருமேனி கம்பித்தும், வாய் குழறியும் நெகிழ்ந்து ஆனந்த கண்ணீர் சொரிந்தும், உளம் பதைபதைத்தும் மெலிவில்லாத விருப்பினால் இந்நிலைகளின் மேலும் தம்மை மறந்து யோக நித்திரையில் பொருந்தும் மாத்திரையில் பாற்கடலில் உடனிருந்தவர் அத்தன்மையைக் கண்டனர். கண்டு நெஞ்சகம் பதைத்தனர் திகைத்தனர் கவலை கொண்ட ழுங்கினர் அஞ்சினர் இரங்கினர் குறிப்பின் வண்ட லர்த்திரு முதலியோர் மற்றிது நிகழ அண்டர் நாயகற் கடுத்தவா றென்னெனத் தெரிவார். 157 | வண்டுகள் சூழும் தாமரை மலரில் வைகும் திருமகள் முதலானோர் கண்டு உள்ளம் நடுங்கினர்; மயங்கினர்; வருத்தம் எய்தினர்; வெருவினர்; பரிந்தனர்; குறிப்பொடும் இதுதோன்ற தேவர் தலைவராகிய இவர்க்கு நேர்ந்தது யாதோ என ஆராய்வார். மென்ற ளிர்ச்செழுங் கோமளத் திருவடி வினையேன் வன்ற னிக்கரம் வருடலான் வருந்தின கொல்லோ அன்றி என்மடித் தலமிசை அசைந்துநொந் தனவோ என்று தன்உளம் அயிர்த்தனள் இலங்கெழில் மலராள். 158 | அழகிய மலர்கள், மெல்லிய தளிர்போலும் மிகவும் மெல்லிய திருவடிகள் பாவியேனுடைய மிகவும் வலிய கைகள் தைவருதலால் 80 |