பக்கம் எண் :


636காஞ்சிப் புராணம்


நாட்டும் அத்திருக் கூத்தினை நாங்களுங் காண
வேட்ட னங்கள்மற் றதுபெறு நெறிவிரைந் தருளாய். 167

     கேட்ட அப்பொழுதே, எதிரில் தரிசனம் பெற்றாற்போல மிக்கெழும் பெருவிருப்பம் மீக்கூர்ந்தெழுதலால் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, ‘விருப்புறுத்தும் அந்நடனத்தை அடியேங்களும் காண விரும்பினோம். அங்ஙனம் பெறற்குரிய வழியை எங்களுக்கு விரைந்தறிவுறுப்பீராக,’

என்று பன்முறை வேண்டலும் ஈர்ந்தொடைத் துளவோன்
நன்று நுங்கருத் தெனமிக நகைமுக மலர்ந்து
குன்ற வில்லியார் சேவடி சிந்தையிற் கொண்டாற்
கன்று நம்பர்தம் அருளினால் அறிவுவந் துதிப்ப.     168

     என்று பலமுறையும் விண்ணப்பிக்க அப்பொழுதே தேனால் ஈரிய
துழாய்மாலையைச் சூடிய திருமால் நும்முடைய விருப்பம் அழகிதுஎனப்
பெரிதும் முகமலர்ந்து மேருமலையை வில்லாக உடையவர் திருவடியை
மனத்துட்கொண்ட திருமாலுக்குச் சிவபெருமான் திருவருளினாலே
அறிவுண்டாக.

மல்லல் தெண்டிரை மறிகடல் மணிகள்கொண் டொதுக்கும்
தில்லைக் கானுடைச் சிதம்பர வரைப்பில்எஞ் ஞான்றும்
செல்வத் தாண்டவம் நவிற்றும்எம் பிரானெனத் தெளிந்தான்
அல்லிப் பூமகள் முதலியோர்க் கன்னது செப்பி.        169

     வளமுடைய மறித்தெழும் திரையையுடைய கடல் மணிகளைக்
கரையிடைச் செலவுய்க்கும் தில்லை என்னும் மரங்களால் தில்லை எனப்
பெயரிய சிதம்பர தலத்தில் எக்காலத்தும் திருவருட் செல்வமாகிய
திருக்கூத்தியற்றும் எமது பிரானெனத் தெளிவுற்றனன், அதனால்,
அகவிதழையுடைய தாமரை மலரில் வாழ்திருமகள் முதலானோர்க்கதனை
உணர்த்தி,

அங்கண் எய்திநாம் ஆளுடை நாயகன் திருமுன்
பொங்கு காதலான் அடைக்கலம் புகுந்துபோற் றிசைத்துத்
தங்கி மெய்த்தவம் இயற்றிடின் தண்ணருள் சுரந்து
நங்க ளுக்கெதிர் காட்டுவன் ஆனந்த நடனம்.           170

     தில்லையை அடைந்து தலைவனார் திருமுன்னர் மிக்கெழும்
விருப்பினால் நாம் சரணம் புகுந்து போற்றுதலாகிய மெய்த்தவத்தைச்
செய்தால் திருக்கருணை மீக்கூர்ந்து பேரின்பக் கூத்தை அங்கே நாம்
காணக் காட்டுவர்.

யோகி யோர்களும் எய்தருந் திருநடம் உரிமை
யாகும் அன்புடை அடியவர்க் கெளியது கண்டீர்
ஏகு வாம்இனி வம்மின்என் றவருடன் எழுந்து
மாக வாற்றினால் வயங்கொளித் தில்லைவந் தடைந்தான்.    171