பக்கம் எண் :


726காஞ்சிப் புராணம்


     இரவில் தாமரையும், பகற்பொழுதில் ஆம்பலும் மலர்ந்து இனிய
தேனைத்துளிக்கும் ஓர் தடாகமும், ஓர் கொடியில் மூன்று தாமரைப்
பூக்களைக் கொள்ளும் நீர் நிலை ஒன்றும், தன்னில் மூழ்கின வரைக் குரங்கு
வடிவாக்கும் தடம் ஒன்றும், மூழ்கினோர் தம்பகைவர்க்குக் கொடுந் துன்பம்
கொடுக்கும் தடாகம் ஒன்றும், மூழ்கினோர் தம் உறவினர்க்கு நல்
லின்பந்தருவ தொன்றும் ஆக ஐந்து தடாகங்கள் உள்ளன.

ஆறு பறவைகள்

     பெய்யாத காலத்தின் அகவிக் கொண்மூ வருவிக்கும்
பெருமஞ்ஞை மறைநூ லெல்லாம், எய்யாமை யின்றியுணர் கிள்ளை
ஏனைக் கணிதநூல் எனைத்தும்எடுத் துரைக்கும் ஆந்தை, நையாது
முழுதுணர்ந்த கபோதம் பாடு நல்லிசைநூ லவைவல்ல நலஞ்சேர்
பூவை, பொய்யாது வேட்டவெலாம் வழங்கு நேமிப் புள்ளுமென
அறுபறவை பொருந்தும் ஆங்கண்.                          13

     மழை பெய்யாத பருவத்தில் கூவி மேகத்தை வருவிக்கும் பெரிய
மயிலும், அறியாமை நீங்கி மறைமுழுதும் உணரும் கிளியும், ஒழிந்த
சோதிட நூலும் பிறவும் எடுத்துக் கூறும் ஆந்தையும், கல்லாது முழுதும்
எளிதிலுணர்ந்த புறாவும், பாடற்குரிய நல்லிசை நூல் வல்ல நலம் நிரம்பும்
நாகணவாய்ப் பறவையும், விரும்பிய பொருள்கள் எவற்றையும் இல்லை
என்னாது வழங்கும் சக்கரவாகப் பறவையும் என ஆறு பறவையும் அங்கு
வாழும்.

ஏழு பொதியில்கள்

     வானாடர் வார்த்தைசெவிப் புலனாம் ஒன்றின் மதகரியை
முயல்ஊக்கித் துரக்கும் ஒன்றின், மேனாகர் உலகுவிழிப் புலனாம்
ஒன்றின் மேவினர்க்குத் திசைமயக்கம் எய்தும் ஒன்றில், கானார்
நெய் யின்றிவிளக் கெரியும் ஒன்றில் பாதலத்தோர் கழறுமொழி
கேட்கும் ஒன்றில், ஆனாது துந்துமிகள் முழங்கும் ஒன்றில் ஆகஏழ்
பொதுத்தானம் வயங்கு மாலோ.                            14

     ஏழு பொதுவிடங்களில், ஒன்றில் தேவர் பேசுதல் கேட்கும், ஒன்றில்
மதமுடைய யானையை முயல் ஊக்கங்கொண்டு துரத்தும், ஒன்றில்
மேலிடமாகிய விண்ணவர் உலகம் கண்ணிற்குப் புலனாகும். ஒன்றில்
அணுகினவர்க்குத் திசைமயக்கம் தோன்றும். ஒன்றில் மணமுடைய நெய்யின்றி
விளக்கெரியும். ஒன்றில் பாதலத்தோர் பேசுகின்ற மொழிகேட்கும். ஒன்றில்
ஒழிவின்றித் தேவதுந்துமிகள் முழங்கும் இவையும் அங்குள்ளன.