எட்டுப் பொய்கைகள் மூழ்குநர்க்குப் பொன்னுருவம் அளிக்கும் ஒன்று முழுமணி ஏர் தரும் ஒன்று விண்ணோர் கோமான், வாழ்வளிக்கும் ஒன்று மனக் கினியவெல்லாந் தரும்ஒன்று வேண்டியதை வழங்கும் ஒன்று, வீழ்தகைத்தா மெய்ஞ்ஞானம் அளிக்கும் ஒன்று விடுதவும் ஒன்றுவினைப் பிணிநோய் முற்றும், பாழ்படுத்தும் ஒன்றென்ன மலங்கள் மாற்றும் பனிமலர்ப்பூம் பொய்கை இரு நான்கு மேவும். 15 எட்டுப் பொய்கைகளில், தம்மில் மூழ்குவோர்க்கு ஒன்று பொன்னுருவத்தையும், ஒன்று மாணிக்க நிறத்தையும், ஒன்று இந்திரன் வாழ்வையும், ஒன்று மனத்திற் கினிய எவற்றையும், ஒன்று விரும்பிய பொருளையும், ஒன்று விரும்பத் தக்கதாகிய மெய்யறிவையும், ஒன்று வீடுபேற்றையும் கொடுக்கும். ஒன்று தீவினைகாரணமாக வரும் கொடிய நோய்களை முற்றும் போக்கும். என்றிங்ஙனம் அழுக்கினை அகற்றும் குளிர்ந்தமலர்களைக் கொண்ட நீர் நிலைகள் எட்டும் அங்குள்ளன. ஒன்பது சிலைகள் தீண்டினரைத் தேவாக்கும் ஒருகல் பாம்பின் கடிவிடந்தீர்த் திடும்ஒருகல் சித்தி யெல்லாம், ஆண்டளிக்கும் ஒருகல்உயிர் உதவும் ஓர்கல் வழக்கனைத்தும் நடுவாய்நின் றறுக்கும் ஓர்கல், மூண்டபிணித் தழும்புறுபுண் மாற்றும் ஓர்கல் மொயயொளிமெய்த் துணிஉறுப்பைப் பொருத்தும் ஓர்கல். ஈண்டியதீ வினைஇரிக்கும் ஓர்கல் ஞானந் தரும்ஒருகல் எனச்சிலைகள் ஒன்பதோங்கும். 16 ஒருகல் தீண்டினரைத் தேவராக்கும். ஒருகல் பாம்பின் கொடிய விடத்தை மாற்றும். ஒருகல் சித்தி யெல்லாம் கொடுக்கும். ஒருகல் இறந்தவர்க்கு உயிர் கொடுக்கும். ஓர் கல் கோடாது நடுவாய் நின்று வழக்கைத் தீர்க்கும். முதிர்ந்த பிணியாகியதொழுநோய் வடுக்களைப் போக்கும். ஒருகல் ஒளிசெறிவும் துண்டுபட்ட உறுப்பினைப் பொருந்தும் ஒருகல் திரண்ட தீவினைகள் அழிக்கும். ஒருகல் மெய்யறிவைத்தரும். இங்ஙனம் சிலைகள் ஒன்பதும் அங்குச் சிறப்புறும். ஒன்பது பொழில்கள் ஒன்றினோர் பெறக்கனக மாரி ஒன்றில் இரசதமா மழை ஒன்றில் முத்து மாரி, ஒன்றில்ஒளிர் குருவிந்த மாரி ஒன்றில் வயிரமழை ஒன்றில்வயி டூய மாரி, ஒன்றில்ஒளி விடும்புருட ராக மாரி ஒன்றில் அடற் புள்ளேற்றுப் பச்சை மாரி, ஒன்றினில் இந் திரநீல மாரி ஒன்றில் பொழியுமலர்ப்பொழில் இவைஓ ரொன்ப தோங்கும் |