பக்கம் எண் :


728காஞ்சிப் புராணம்


     ஒன்றில் பொன் மழையும், ஒன்றில் வெள்ளி மழையும், ஒன்றில் முத்து
மழையும், ஒன்றில் பதுமராக மழையும், ஒன்றில் வயிரமழையும், ஒன்றில்
வயிடூரிய மழையும், ஒன்றில் புட்பராக மழையும், ஒன்றில் கருடப்பச்சை
மழையும், ஒன்றில் இந்திர நீல மழையும் பொழியும் ஒன்பது சோலைகளையும்
உடைத்து அந்நகர்.

பத்து மன்றங்கள்

     சொல்லருமா பாவியுறின் மூங்கை யாக்குஞ் சோரர்களை
மருளுறுத்துங் கல்வி தேற்றும், பல்வகைய வடிவுதவுஞ் சாவா மேன்மை
பாலிக்கும் பாதலஞ்சேர் பிலத்தைக் காட்டும், வல்லவர்க்குந்
திசைமயக்கும் பொன்மா ணிக்க மழைபெய்யும் பகல்இரவு மாறாக்
காட்டுஞ், செல்லுநரைப் பிறர்காணா வியப்புச் செய்யும் இவைமன்றம்
ஒருபதெனத் திகழு மாலோ.                                18

     பேசற்கரிய பெரும்பாவி சேர்ந்தால் ஒன்று ஊமையாக்கும்! ஒன்று
திருடர்களை மயக்கும் ஒன்று கல்வியை அறிவுறுத்தித் தெளிவிக்கும்;
ஒன்று பல்வகை வடிவங்களைக் கொடுக்கும்; ஒன்று இறவா மேன்மையைக்
கொடுக்கும்; ஒன்று பாதல உலகிற்குச் செல்லும் பிலத்துவாரத்தைக்
காட்டும்; ஒன்று அறிவான் வல்லவர்க்கும் திசை மயக்கைச் சேர்க்கும்;
ஒன்று பொன்னும் மாணிக்கமுமாகிய மழையைப் பெய்யும்; ஒன்று பகலை
இரவாகவும், இரவைப் பகலாகவும் மாறுபட உணர்த்தும். தன்கண்
சேர்ந்தவரைப் பிறர் காணாதவாறு மறைக்கும் அதிசயத்தைச் செய்யும்.
இவைபத்தும் மன்றங்களாகத் திகழும்.

பதினொரு கூவல்கள்

     தயிர்க்கூவல் பாற்கூவல் நறுநெய்க் கூவல் மதுக்கூவல்
செழுங்கருப்புச் சாற்றுக் கூவல், மயக்கமற முத்திநெறி துறக்க
மார்க்கம் மற்றுலகின் கதிகாட்டும் மும்மைக் கூவல், வியப்பெய்த
நிழல் பிணிக்குங் கூவல்பாரின் வித்தின்றி நாறுசெய்யும் விரிநீர்க்
கூவல், அயர்ப்பின்றி அங்கணைந்தோர் மீளச் செய்யும் அருங்கூவ
லொடுங்கூவல் பதினொன் றாமால்.                          19

     தயிர், பால், நறியநெய், தேன், கருப்பஞ்சாறு, இவை தனித்தனிக்
கிணறுகளாக உள்ளன. மூன்று கிணறுகள் தெளிவுற முத்திக்கு வழியையும்,
சுவர்க்க நெறியையும், பிற உலகிற்குச் செலவையும், காட்டுவன ஆகும்.
விம்மிதமடைய நிழலைப்பிணிக்கும் கிணறு ஒன்றும், நிலத்தில் விதையின்றி
முளையைத் தோற்றுவிக்கும் கிணறு ஒன்றும், மயக்கமின்றி அங்
கணுகினோரைத் திரும்பச் செய்யும் கிணறு ஒன்றும் ஆகப் பதினொரு
கூவல்கள் அங்குள்ளன.