அறிந்து வைத்துச் செய்தால் அப்பாவங்கள் போதல் இல்லையாகும். ஆகலின், அறம் பொரு ளின்பம் வீடாகிய நாற்பயனையும் விரும்பி இங்கு வாழ்வோர் தத் தமக்கு விதித்தபடி ஒழுகின் திருவேகம்பர் தம் திருவருளுக்குப் பாத்திர ராவர். விம்மிதப் படலம் முற்றிற்று. ஆகத் திருவிருத்தம்-2553 ஒழுக்கப் படலம் அறுசீரடி யாசிரிய விருத்தம் மாதரை யெல்லாம் வீழும் மடவனும் ஈன்ற தாயைக் காதலன் ஆகான் அச்சீர்க் கடியனுஞ் சிவன்வாழ் வைப்பிற் பாதகம் புரியல் காஞ்சிப் பதியிடைச் சிறிதுஞ் செய்யல் ஓதிய விதியி னாறே ஒழுகுதல் முறைமைத் தாமால். 1 | மகளிர் எவரையும் விரும்பும் பெருந் தூர்த்தனாகிய அறிவிலியும் தன்னைப் பயந்த தாயை விரும்பான். அதுபோலக் கொடியனும் சிவ தலங்களில் பாவம் செய்யாதிருக்கக் கடவன். அவற்றினும் காஞ்சி நகர்க்கண் சிறிதும் பாவம் செய்யற்க. நூல்களில் விதித்த வழியில் ஒழுகுதலே வழக்குடைத்தாகும். செந்துவர் படரும் ஆழித் தினகரன் எழுமுன் கன்னல் ஐந்தென எழுந்து வெண்ணீ றணிந்துயர் மாவின் மூலத் தெந்தையைக் காம நோக்கின் இறைவியை நினைந்து போற்றிப் புந்தியின் உறத்தான் செய்யும் பொருள்அறம் சிந்தை செய்து. 2 | பவளக்கொடி படர்கின்ற கடலில் சூரியன் தோன்றுதற்கு ஐந்து நாழிகை அளவு முன்னெழுந்து திருநீற்றினை அணிந்து உயர்ந்த மாவடியில் எழுந்தருளும் எந்தையையும் காமாட்சியம்மையையும் எண்ணிப் போற்றிப் பின் அறிவில் நன்கு பொருந்தத் தான் செய்யவேண்டிய பொருளையும் அறத்தையும் சிந்தித்து. கரகமுந் தண்டும் மற்றுங் கரந்தழீஇக் காமர் ஊர்க்கு நிருதியிற் படர்ந்து காதில் நீண்ட முப் புரிநூல் ஏற்றித் தரணியில் திருமணம் இட்டுச் சந்திகள் பகல்வ டக்கும் இரவுதென் பாலும் நோக்கி இருந்திரண் டியக்கம் நீத்து. 3 | |