கமண்டலமும், தண்டமும், பிறவும் கைக்கொண்டு அழகிய ஊர்க்கு அப்பால் தென்மேற் றிசையிற் சென்று முப்புரி நூலை வலக்காதில் சுற்றிக்கொண்டு பூமியில் துரும்பை இட்டு உதயத்தில் வடக்கு நோக்கியும் அத்தமனத்தில் தெற்கு நோக்கியும் இருந்து மலசலங்களைக் கழித்து, குறிஇடக் கரத்துப் பற்றிக் குறுகிநீர் முகந்திட் டோர்கால் வெறிகமழ் புனலான் மண்ணாற் குறியினை விழுமி தாக்கி நிறையமண் முக்கால் இட்டுக் குதங்கழீஇக் கழுவு நீள்கைக் கிறுதியின் ஈரைங் காலும் இருகைசேர்த் தேழு காலும். 4 | குறியை இடக்கையில் பற்றி நீரைக் குறுகிக் கைப் பாத்திரத்தில் முகந்து ஓர்முறை நீராலும் மண்ணாலும் அக்குறியைத் தூய்மை செய்து மும்முறை மண் சேர்த்துக் குதத்தைக் கழுவிய இடக்கையைப் பத்து முறையும் இரு கையையும் சேர்த் தேழு முறையும், அடிஎழு காலும்பூசி அறலினாற் சுத்தி செய்க இடனுடை இல்லோர்க் கீதாம் இரட்டிமும் மடங்கு நாற்றி கடனறி பிரம சாரி காட்டகத் துறைவோன் மற்றைக் கெடலருந் துறவி இன்னோர் கெழுதக இயற்றல் வேண்டும். 5 | கால்களை ஏழுமுறையும் கழுவி மண்கொண்டு தூய்மை ஆக்குக. இம்முறை மனைஅறம் காப்பவர்க்கு விதித்த தாகும். பிரமசாரி இருமடங்கும், வானப் பிரத்தன் மும்மடங்கும், சந்நியாசி நான்கு மடங்கும் இங்ஙனம் செய்தல் வேண்டும். கொணர்வுறு நீர்வாய்ப் பெய்து கொப்புளிந் திருகால் தூய்மை அணையநீர் குடித்துப் பின்னர் அணிவிரல் உறுப்புத் தீண்டல் இணைவிழைச் சுணவு மாற்றீ ரியக்கமுற் றிடில்நா லெண்கால் இணையில்ஈ ரெண்கா லெண்காற் கொப்புளித் திடுதல் வேண்டும். 6 | நீரைக் கொண்டு வந்து வாயில் விட்டு இருமுறை கொப்புளித் துமிழ்ந்து தூய்மை உண்டாக இருமுறை ஆசமனம் செய்து பின்னர் மோதிர விரலால் அங்கங்களைத் தொடுக (அங்க நியாசம்கரநியாசம்). புணர்ச்சியுறின் முப்பத்திரண்டு முறையும் உணவிற்குப் பின் பதினாறு முறையும், மலசலமோசனத்திற்குப் பின்பு எட்டு முறையும் வாய்கொப்புளித்திடல் வேண்டும். சலமலம் விடுக்கும் போதுந் தையலார் கலவிப் போதும் குலவெரி வளர்க்கும் போதும் வெண்பல்கோல் தின்னும் போதும் உலவுநீர் குடையும் போதும் உணவினும் பேசல் செய்யார் மலவலி துரக்கும் எங்கோன் வகுத்தநூல் முறையின் நிற்போர். 7 | |