திருக்கைலாய பரம்பரையின் வரு சிவஞானபோதநெறியை உலகினில் எடுத்துக்காட்டும், திருவெண்ணெய் நல்லூரைப் பாடி வீடாக் கொண்டு அத்துவித உண்மைகண்டு ‘மெய்கண்டார்’ என்னும் காரணத்திருப்பெயர் ஏற்றவர் தம் வழிவழியில் வந்தருளி மெய்ஞ்ஞான சூரியனாகித் திருவாவடுதுறையில் ஞானச்செங்கோல் செலுத்திவரு குருநமச்சிவாய தேவர்தம் மரபாம் திருநந்திதேவர் மரபு நெடும் பல்லூழி தழைப்பதாக. சயிலாதி-திருநந்திதேவர் வேலப்ப தேசிகர் எவ்வெவகோட் படுபொருளும் அஞ்செழுத்தின் அடக்கிஅவற் றியல்பு காட்டி, மெய்வகைஅஞ் சவத்தையினும் நிற்குமுறை ஓதுமுறை விளங்கத் தேற்றி, அவ்வெழுத்தின் உள்ளீடும் அறிவித்துச் சிவபோகத் தழுத்தி நாயேன், செய்வினையும் கைக்கொண்ட வேலப்ப தேசிகன்தாள் சென்னி சேர்ப்பாம். 20 எவ்வெச் சமயவாதிகள் நூலையும், நூற்பொருளையும், திருவைந்தெழுத்தனுள் அடக்கி, அவற்றின் ஏகதேச நிலையை உணர்த்தி, நின்மலசாக்கிரமுதலிய நிலைகளில் நிற்குமுறைக்கும், நிற்கை நிலைபெற அறிவாற் கணிக்குமுறைக்கும் உள்ள ஒற்றுமையை விளங்கத் தெளிவித்து, ஐந்தெழுத்தின் தலைமைப் பொருளையும் அறிவித்துச் சிவபோகத்தில் திளைப்பித்து யாம் அவர்க்கு உடைமைப் பொருளாயினமையின் எமது ஆகாமிய வினையையும் கைக்கொண்ட குருநாதராகிய பின்வேலப்ப தேசிகர் திருவடிகளைச் சிரமேற்கொள்வாம். நூல் செய்தற்குக் காரணம் கலிநிலைத் துறை மறைநான்கும் பயின்றொழுகி இட்டிகளும் பல இயற்றிமல்லல் ஞாலத், திறவாத புகழ்படைத்தும் ஈசனிடத் தன்பிலரை எண்ணா துள்ளம், புறம்ஓதித் கொலைபயின்று மதுமாந்துங் கொடும்பாவப் புலைய ரேனும், அறவாணன் திருவடிக்கீழ் அன்பினரேல் அவர்எம்மை அடிமை கொள்வார். 21 நான்கு மறைகளை நன்கு பயின்றும், நல்வழி ஒழுகியும் வேள்விகள் பல இயற்றியும் அழியாத புகழ் அடைந்தும் ஈசனிடத் தன்பிலரைப் பொருளாக மதியாமையையும், அறவழி ஒழுகாதும் அருள்வழி ஒழுகுவோர் ஆயின் அவர் ஏவல்வழி நிற்கும் பெற்றிமையையும் எடுத்தோதுவர் ஆசிரியர். மற்றைய சிவநேசர்கள் பொருவில் கச்சியம் புராணம்வண் டமிழினிற் புகலென் றிருநி லம்புகழ் மணிமதிற் கச்சிஏ கம்பர் திருவ ருட்குரி யான்றவர் கூறிய சிறப்பால் உரிமை உற்றெழும் ஆசையான் உரைத்திடலுற்றேன். 22 | |