பக்கம் எண் :


92காஞ்சிப் புராணம்


     அச்சிறப்பினையுடைய திருமால் வலம்புரி விநாயகர் திருவடிகளை
வணங்கிப் பகைவர் மனமயங்குதற்குக் காரணமாகிய ஒலியினையுடைய பாஞ்ச
சன்னியத்தை மீளப்பெற்றதும், பிரமன் உண்மை யன்பொடும் யாகம் செய்து
உயர்ந்து சிவாத்தானத்துப் பெருமான் அருளைப் பெற்றுத் திருமாலையும்,
உலகையும் உண்டு, மீளப்படைத்தவரலாறும்;

     கருகிருள் விடத்தை இறையவன் பருகக் காட்டிய அறக்கடை
தணப்ப, இருமறை விதியாற் கடவுளர் மணிகண் டேசனை ஏத்தியவாறும்,
மருளுறு செருக்கிற் பொய்யுரை கிளந்த வல்வினை கழிதர வியாதன்,
பொருவருஞ் சார்ந்தா சயப்பெரு வரைப்பிற் பூசனை இயற்றிய வாறும். 4

     பல்லுயிரும் கருக வந்த ஆலகால விடத்தை இறைவன் பருகுதற்குக்
காரணமான பாவம் நீங்கப் பெரிய வேத விதிப்படி தேவர்கள் மணிகண்டேசப்
பெருமானைப் பூசித்ததும்; வியாச முனிவரன் மயக்கம் மிகு செருக்கினால்
பொய் கூறி அதனால் வந்த தீவினை நீங்க ஒப்பரிய சார்ந்தாசயத்தில்
இறைவனைப் பூசனை செய்ததுவும்;

     அறன் கடை-பாவம் (திருக்.142)

     வீட்டினை விழைந்தேழ் முனிவரும் பூசை வேறுவே றியற்றிய
வாறும், கோட்டமில் கொள்கைப் பராசர முனிவன் தொழுதுதன்
தாதையர்க் கொன்று, மாட்டிய அரக்கன் குலத்தொடு மடியச் செற்றதும்
விளக்கொளி மாயோன், நாட்டம்மூன் றுடைய நாதனைப் பரவி நதிதடுத்
தோம்பிய வாறும்.                                      5

     அத்திரி முதலிய முனிவர் எழுவரும் வீடு பேற்றினை விரும்பித்
தனித்தனி இடங்களில் (சப்த தானம்) வழி பாடு செய்ததும்; மாறுபாடில்லாத
கொள்கையையுடைய பராசர முனிவர் பூசை இயற்றித் தன் தந்தையைக்
கொன்ற சுதாசன் என்னும் அரக்கன் தனது குலத்தோடு அழியத் தான் செய்த
வேள்வியிற் கொலை செய்ததும்; விளக்கொளி வடிவமாய்த் திருமால் முக்கண்
முதல்வனை வணங்கி வேகவதி நதியைத் தடுத்துப் பிரமன் யாகத்தினைக்
காத்ததும்;

     கொன்று மாட்டிய, ஒருபொருட் பன்மொழி. நாட்டம்-கண்.

     ஈண்டிய புகழ்முத் தீச்சரம் பரசி ஈன்றவள் சிறையினை விடுவித்,
தாண்டகைக் கலுழன் நஞ்சுபில் கெயிற்றுப் பணிகளை அலைத்தெழு
மாறும், நீண்டவன் உணராத் திருவடி போற்றி நெளியுடற் பணிகளும்
எம்மான், பூண்டுகொண் டருளப் பெற்றமே தகவாற் புள்ளினை
வினாவிய வாறும்.                                    6

     ஆளுந் தன்மையினையுடைய கருடன், செறிந்த புகழமைந்த
முத்தீசப்பெருமானை வணங்கி மாற்றவள் வைத்த சிறையினின்றும் தன்
தாயை வீடுகொண்டு விடத்தை உமிழ்கின்ற பற்களையுடைய பாம்புகளை