பக்கம் எண் :


94காஞ்சிப் புராணம்


     அந்தணன்-பிரமன், (தழு. 412லும் காண்க) பெற்றதுவும், வாழ்ந்ததுவும்
என்பனவற்றைக் ‘‘கெடு மென்னாது ஓடுமென்றமையால், குற்றியலுகரம்
ஒரோவழி இ ஈ ஐவழி என்னும் பொதுவிதி பெறுதலுங் கொள்க” (நன். 164)

     அங்கியங் கடவுள் ஏத்திவிண் புலத்தார் அவிப்பொறை
மதுகைபெற் றதுவும், பங்கமின் றிறைஞ்சிச் சவுனக முனிவன்
வீட்டினைத் தலைப்படும் பரிசும், மங்கரு வெப்பு விழியவற் செகுத்த
சுரகரம் வானவர் வழுத்திப், புங்கவர் பெருமான் சுக்கிலம் பருகு
வெப்பு நோய் போக்கிய வாறும்.                      10

     அக்கினி தேவன் துதித்து விண்ணிடத்தாராகிய தேவர்க்கு வேள்வியிற்
கொடுக்கும் அவியைச் சுமக்கும் வன்மை பெற்றதும்; சவுனக முனிவர்
பழுதில்லையாக வணங்கி முத்தியைத் தலைக்கூடியதும்; கேடிலாச் சுராக்கனை
அழித்த சுரகரேசப் பெருமானைத் தேவர் வணங்கி அப்பெருமானது சுக்கிலம்
பருகிய சுரநோய் போக்கியதும்;

     புலிப்பத முனிவன் கான்முளை போற்றிப் பொங்குதீம் பாற்கடல்
பெற்று, வலித்திறல் பார்த்தன் வலவனை முடிமேல் மலரடி சூட்டி
ஆண் டதுவும், கலித்தெழும் இமையோர் மலைமகள் மொழியாற்
கரிசறத் தெளிந்தருட் குறியில், சலிப்பறும் இயக்க வடிவுகொண்
டணைந்த தலைவனைத் தொழுதுய்ந்த வாறும்.            11

     வியாக்கிர பாதமுனிவர் புதல்வராகிய உபமன்னிய முனிவர்
போற்றி செய்து பாற்கடலைப் பருகுவதற்குப் பெற்று, மிகு வலிபடைத்த
பார்த்தசாரதியாகிய கண்ணனுக்குத் திருவடி தீட்சை செய்து ஆட்கொண்டதும்;
ஆரவாரித்தெழும் தேவர்கள் மலைமகள் திருவாக்கால் ஐயம், விபரீதமாகிய
குற்றங்கள் நீங்கத் தெளிந்து திரிவில்லாத யட்சவடிவு கொண்டணைந்த
சிவபிரானைச் சிவலிங்க வடிவில் தொழுது பாவந் தீர்ந்ததும்;

     ஏதமில் பதிற்றுப் பதின்மரோ டீரொன் பதின்மரும் ஏத்திய
வாறும், மாதர்மேற் றளியிற் கவுணியன் பாட்டால் மால்சிவன்
உருவுபெற் றதுவும், ஆதரம் பூப்ப ஐங்கரப் புத்தேள்
அனேகதங்காவதம் பரசிக், கோதற உலகம் எண்ணியாங்
குதவக் கொடுத்திடும் இறைமைபெற் றதுவும்.                 12

     குற்றமில்லாத உருத்திரர் நூற்றுவரொடும் பதினெண்மரும் துதித்ததும்;
அழகிய திருமேற்றளியில் கவுணிய குலத்துதித்த திருஞான சம்பந்தர்
திருப்பாட்டால் திருமால் சிவசாரூபம் பெற்றதும்; விநாயகப் பெருமான்
அன்பு பெருக அனேக தங்காவதத்தில் இறைஞ்சி உலகோர் வேண்டிய
வேண்டியாங்குக் குற்றமறக் கொடுக்கும் தலைமையைப் பெற்றதும்.

     உருத்திரர் வழிபாடு திருமேற்றளிப் படலத்துட் காண்க.