பக்கம் எண் :


இராவண காவியம் 105

   
        27.        ஆடு பம்பரத் தாடுநாப் பண்விரைந்
                  தாடு மிவ்வுல கன்னவா றேயுயிர்
                  கூடு தன்மை குயின்ற நிலநடுக்
                  கோடி ருந்ததா லப்பெருங் கோநிலம்.

        28.        ஆத லான்முத லவ்வயி னேயுயிர்
                  போத நின்ற புகழின தாதலான்
                  மாத மிழக மக்களே மாநிலம்
                  மீது போந்த முதலென விள்ளுவர்.

        29.        உலக முன்னா டுயர்தமிழ் நாடதே
                  உலக முன்மக்க ளொண்டமிழ் மக்களே
                  உலக முன்மொழி யொண்டமி ழேயிதை
                  உலக மின்றறி யாநிலை யுள்ளதே.

        30.       அத்த குபழங் காலையே யன்னவர்
                  எத்த கைய ரெனவேயிந் நாளையர்
                  நத்த வத்தகு நாகரி கத்தொடு
                  வைத்த வானா வளத்தொடு வாழ்ந்தனர்.

        31.        ஆங்க ரும்பிய அந்நாக ரிகமே
                  வீங்கு சிந்து வெளியில் மலர்ந்துபின்
                  ஊங்கு சென்றிவ் வுலக முழுவதும்
                  பாங்கு டன்மணம் வீசிப் பரந்ததே.

        32.       ஆங்கு நின்றிவ் வுலக மடங்கிலும்
                  பாங்கி னன்னராங் காங்கு பரவினர்
                  ஏங்கு தட்பவெப் பந்நிலைக் கேற்பவே
                  ஈங்கு வெவ்வே றினமொழி தோன்றின.

        33.        ஈத றிகிலா ஏழை யுலகினர்
                  மாத மிழ்மக்கள் வாழவிங் கேமுனம்
                  போத நின்ற புதுக்குடி யாமென
                  ஓத வாருண்மை யோர்கிலா தூமர்போல்.
-----------------------------------------------------------------------------------------
        27. நாப்பண் - நடுப்பகுதி. ஆடுபம்பரத்து நாப்பண் விரைந்து ஆடும்;
இவ்வுலகு அன்னவாறே நடு இடத்தில் - விரைந்தாடும்; அப்பெருங் கோநிலம் நில
நடுக்கோடு - கோட்டில் - இருந்ததால் உயிர் கூடும் தன்மை குயின்ற எனக் கூட்டுக.
குயின்ற - அடைந்த - அடைந்தது; கோநிலம் - முதல் நிலம். 28. தமிழக மக்கள் -
தமிழ், தமிழகம், தமிழ் மக்கள் எனக் கூட்டுக. மாநிலம் - உலகம். 30. ஆனா - நீங்காத,
குறையாத. 32. ஏங்குதல் - மாறுதல். ஈங்கு - இவ்வுலகத்தின்கண். 33. ஏழை உலகினர் -
அறிவில்லாத உலகினர். போதநின்ற - போந்த, வந்த.