பக்கம் எண் :


இராவண காவியம் 107

   
        41.        அத்தகைய திருநாட்டை யறந்திறம்பா வகையான்ற
                  முத்தமிழின் காப்பாக மொழிபிறழா வழிமுறையின்
                  ஒத்தபெருந் தலைமையின்கீ ழுகந்துதமிழ் வேளிர்பலர்
                  தைத்தலைஇய வாண்மையொடு தனிக்காத்து வந்தனரே.

        42.        மஞ்சுவதழ் தருமேற்கு மலைத்தொடர்கீழப் படமேற்கில்
                  விஞ்சுபுகழ்ப் பெருஞ்சேர வேந்தர்வழி வழியாக
                  வஞ்சியெனப் பெயர்பூண்ட மலிவளத்த திருநகரில்
                  அஞ்சலெனக் குடிகாத்தா ரமைதியுட னதன்கீழ்ப்பால்;
 
                     கிழக்கு நாடு
 
        43.        சிங்களஞ்சா வகமுதலாந் தீவுகளுந் திரையோவா
                  வங்கவிருங் கடற்பரப்பும் மரஞ்செறிகான் மலையருகச்
                  செங்கரும்புஞ் செந்நெல்லுஞ் செருக்கொடுவான் றொடவிகலும்
                  பொங்குவள வயல்மருதம் புனைநாடாப் பொலிந்ததுவே.

        44.       அம்மருத வளநாட்டி னணிநாகை யெனுநகரில்
                  மும்மதிலின் கோயிலிடை முறைதிறம்பா வகையிருந்து
                  செம்மையுடன் றமிழர்களைத் திசைமணக்குந் தமிழ்ச்சோழர்
                  தம்முயிரின் காப்பேபோற் றனிக்காத்து வந்தனரே.

        45.       அந்நாடு கிழக்கிருந்த தாற்கிழக்கு நாடெனவும்
                  முன்னோடு மருதவள முதன்மைகொடிந் திரமெனவும்
                  தென்னாடுந் திருநாடும் செவிகேட்கும் புகழ்வாய்ப்ப
                  எந்நாடு மிணையில்லே மெனவேங்க விலங்கினதே.

        46.        அக்கிழக்கு மேற்கொடுநல் லணிகிளர்தென் பாலியும்பொன்
                  தொக்கிருக்கும் பெருவளமும் தொகுவளத்த திராவிடமும்
                  மக்களுக்கும் புட்களுக்கும் மாக்களுக்கும் வேண்டுவன
                  புக்கிருக்குந் தமிழகமாப் பொருவிலவாப் பொலிந்தனவே.
 
                     கலி விருத்தம்
 
        47.        இவ்வகை நான்குட னியன்று பல்வளந்
                  துவ்விய தமிழகந் துணிந்த மேலவர்
                  செவ்விய முறையினிற் சென்ற வைந்நிலக்
                  குவ்வையின் முதலிய குறிஞ்சி காணுவாம்.

------------------------------------------------------------------------------------------
        41. தைத்தலைஇய - மிகச்சிறந்த, தலையாய. 45. முன் - கிழக்கு. 47. குவ்வை -
கூட்டம்.