பக்கம் எண் :


108புலவர் குழந்தை

   
ஐந்நிலம் - குறிஞ்சி
 
        48.        இடிகுரல் யானைதன் னிளைய வின்னுயிர்ப்
                  பிடிபசி களைந்திடப் பெரிய யாக்கிளை
                  முடியது படியுற முறிக்கு மோசையாற்
                  படிசிறு கிளியினம் பறந்து செல்லுமால்.

        49.        அருவிய முருகிய மார்ப்பப் பைங்கிளி
                  பருகிய தமிழிசை பாடப் பொன்மயில்
                  அருகிய சிறைவிரித் தாடப் பூஞ்சினை
                  மருவிய குரக்கினம் மருண்டு நோக்குமால்.

        50.        பன்றியி னினமுறாப் பரணங் காப்பருஞ்
                  சென்றற முதிர்தினைக் கதிர்கொய் செம்மருங்
                  கன்றிய வள்ளியின் கிழங்கு கன்னருங்
                  குன்றெதி ரொலிபடக் குறிஞ்சி பாடுவர்.

        51.        கிளிகடி பரணிடைக் கிளவி வேட்டவன்
                  குளிர்நிழல் வேங்கையிற் குரவை யாடிடும்
                  அளிமுரல் குழலியின ளகத் துண்மறை
                  ஒளிமுக மதியினை யுருவி நோக்குமால்.

        52.        அடுப்பிடு சாந்தமோ டகிலின் நாற்றமும்
                  துடுப்பிடு மைவனச் சோற்றி னாற்றமும்
                  மடுப்படு காந்தளின் மணமுந் தோய்தலாற்
                  கடைப்படு பொருளெலாங் கமழுங் குன்றமே.

        53.        தண்டமி ழகமெனுந் தாயின் மங்கலங்
                  கொண்டணி விழவயர் குறிச்சி முன்றிலிற்
                  றொண்டக முழங்கிடத் தோலின் யாக்கையர்
                  கண்டெனு மொழிச்சியர் களிப்ப வாடுவர்.

        54.        சந்தன முன்றிலிற் றங்கை பாவையை
                  மந்திகை செய்துள மகிழச் செய்யுமால்;
                  குந்தியே கடுவனுங் குழந்தை முன்மட
                  லந்திகழ் கிலுகிலி யாட்டித் தேற்றுமால்.
------------------------------------------------------------------------------------------
        48. யா - ஒருமரம். படி - நிலம். 49. முருகியம் - குறிஞ்சிப் பறை. 50.
கன்றுதல் - முதிர்தல். கல்நர் - தோண்டுவோர். 51. அளி - வண்டு. அளகம் - மயிர் 52.
சாந்தம் - சந்தனமரம். ஐவனம் - மலை நெல். 53. குறிச்சி - குறிஞ்சி நிலத்தார்.
தொண்டகம் - குறிஞ்சிப் பறை. 54. மடல் - ஓலை. கிலுகிலி - கிலுகிலுப்பை.