பக்கம் எண் :


இராவண காவியம் 111

   

          68.     பொருந்திய நண்பகற் போதிற் காளைபின்
                 திருந்திழைக் கன்னியுஞ் செல்லக் கண்டுமே
                 இருந்துமே யெம்மனை யின்று நாளைநீர்
                 விருந்துண்டு சென்மென வேண்டிக் கொள்வரே.

          69.     தோட்டுணை யாகவே சுரிமென் கூந்தலைக்
                 கூட்டியே செல்பவன் குற்ற மற்றவன்
                 ஆட்டிநீ பிரிக்கலை யென்றவ் வன்னையை
                 மீட்டுமே யூர்செல விடுக்கு வார்களே.

          70.     ஒட்டிய சுற்றமாங் குறவே மீளியைக்
                 கட்டியே தழுவிடுங் கற்பைக் கண்டுமே
                 விட்டிரு வோரையும் விலகு வார்சிலர்
                 இட்டிரு வோரையு மேகு வார்களே.

          71.     அடிபடு நிரைகவர் பறையி னார்ப்பினாற்
                 கொடுவரி வெருவுறூஉங் கொதிகொள் வெஞ்சுரம்
                 துடியிடை யினைதரத் துறந்து செல்பவர்
                 படருற நண்பகற் பாலை மன்னுமால்.
 

                மருதம் - அறுசீர் விருத்தம்
 

           72.    கல்லிடைப் பிறந்த யாறுங் கரைபொரு குளனுந் தோயும்
                 முல்லையம் புறவிற் றோன்று முருகுகான் யாறு பாயும்
                 நெல்லினைக் கரும்பு காக்கும் நீரினைக் கால்வாய் தேக்கும்
                 மல்லலஞ் செறுவிற் காஞ்சி வஞ்சியு மருதம் பூக்கும்.

           73.    சேற்றினை யுழுவார் சேற்றிற் செந்நெலை விதைப்பார் செந்நெல்
                 நாற்றினை நடுவார் நாற்றின் நடுக்களை களைவார் நன்னெல்
                 தூற்றினை யறுப்பார் தூற்றின் சுமையினைச் சுமப்பார் சுற்றும்
                 ஏற்றினை யுகைப்பா ரேற்றி னிகல்வலி யுழுநர் வாழ்வே.

------------------------------------------------------------------------------------------          68. இன்று இருந்து விருந்துண்டு நாளை சென்மென. 69. தோள் துணை.
ஆட்டி - பெண், ‘அம்மா’ என்றபடி. அன்னை - செவிலி. 70. மீளி -
பாலைநிலத்தலைவன். கற்பு - மணஞ்செய்து கொள்ளும். விருப்பம். 71. நிரை - ஆவினம்.
கொடுவரி - புலி. படர் - துயர். 72. கல் - மலை. முருகு - தேன், மணம். மல்லல் -
வளம். செறு - வயல். 73. சுற்றுதல் - தாம்பாடுதல், போரடித்தல். ஏறு - எருது. இகல் -
மாறுபாடு.