74. நிலையிலாப் பொருளை நீக்கி நிலைப்பொரு ளாக்கு மாப்போல் அலைபடு பதரும் புல்லு மப்புறப் படுத்தி யான்ற கலைவலா ருள்ளம் போன்ற களத்திடைக் களமர் மேலை மலையெனக் குவித்துச் செந்நெல் மணிப்பொலி தூற்று வாரே. 75. தூற்றிய பொலியைத் தங்கள் தொழிலினுக் குதவி நாளும் ஆற்றிய வினைஞர்க் கெல்லா மளவறிந் தளித்துப் பெற்ற பேற்றினை யில்லஞ் சேர்த்துப் பெருநிலக் கிழவி தன்னைப் போற்றியே பொலிக வென்று பொங்கல்வைத் துவக்கு வாரே. 76. போர்க்களம் பாடிப் பெற்ற பொன்மலர் பொலியச் சூடி மாக்கிணைப் பொருநர் செந்தா மரைக்குள மருதம் பாடி ஏர்க்களம் பாடிப் பெற்ற பரிசினை யிணையி லாத்தம் ஊர்க்களம் பாடு வார்தம் முடைப்பரி சாங்கு வாரே. 77. மரைமலர்க் குளத்தி லாடும் மயிர்த்தலைச் சிறுவர் நீண்ட பொருகரிக் குருத்த ளந்து பொம்மெனக் களிப்ப ரோர்பால், குரைகழற் சிறுவர் போரிற் குலுங்கியே தெங்கின் காயைப் புரைதபப் பறித்துக் காஞ்சிப் புனைநிழ லருந்து வாரே. 78. மழுக்குதா ராக்குஞ் சுக்கு வாத்திளங் குஞ்சு நீத்தம் பழக்கவக் காட்சி யைத்தாய் பார்த்துள மகிழு மோர்பால் வழக்குறு மக்க ளுண்டு வழிச்செல விளநீர்க் காயைக் கொழுக்கவுண் டலுத்துப் போன குரக்கினம் பறித்துப் போடும். 79. நீரகம் பொருந்த நீரார் நிலவளந் திருந்த நீடும் ஊரகந் தோறும் செந்நெ லுணவக மருவ வூணின் சீரக வியலா ரூடல் செய்யும்வை கறையி லேரார் பாரக முறவேர்ப் பூட்டும் பைம்புனல் மருத மோங்கும். |