பக்கம் எண் :


இராவண காவியம் 135

   
         42.      முத்தமி ழாய்தர முறையி னாக்கிய
                 அத்தமிழ்ச் சங்கமவ் வண்ணல் பின்னரும்
                 வைத்ததம் முன்னவர் வழியைப் பின்றொடர்ந்
                 தொத்தினி தோம்பிட வோங்கி வந்ததே.

         43.     அந்நிலை யிருந்தநம் அருமைத் தாயயல்
                 மன்னவ ராட்சியால் வடவர்ச் சேர்ந்தவன்
                 தன்னைநேர் தமிழரால் தமிழ ரல்லரால்
                 இந்நிலை யடைந்தனள் இன்னு மென்கொலோ.
 
7. கடல்கோட் படலம்
 
        1.      இங்ஙனம் பல்சிறப் பியைந்து பல்வள
               முங்கியே செந்தமிழ் மொழியை யோம்பியே
               தங்களுக் கரசர்கள் தாங்க ளாகவே
               மங்கலம் பொருந்திட வாழ்ந்து வந்தனர்.

        2.      இவ்வகை வாழ்கையி லினிது போற்றிடும்
               செவ்வியர் பொருளினைத் தீயர் நன்றென
               வவ்வுத லுலகியல் வழக்கம் போலவே
               கவ்வைநீர் வேலையுங் கருத்துட் கொண்டதால்.

        3.     அல்லது வழியிற்கேட் பாரற் றேங்கிட
               நல்லது மறைவினை நண்ணி வாழினும்
               பல்லவர் கணுமதிற் பாய்தல் போல்வளம்
               புல்லுநா டதனைக்கண் போட்ட வாழியும்.

        4.     அடுத்தநன் னாடென அளப்பில் பல்வளம்
               உடுத்ததென் பாலியா மொப்பில் நாட்டினிற்

               கடுத்திடு பல்வளக் காட்சி கண்டுவாய்
               மடுத்திட வுளத்திடை மதித்த வாழியும்.

        5.      அன்னதென் பாலிநா டளப்பில் பல்வளத்
               துன்னிட வியன்ற பஃறுளிய தாகையால்
               மன்னிய வளமினும் வாய்ப்ப வெண்ணியே
               அன்னதை வாய்க்கொள வமர்ந்த வாழியும்.
------------------------------------------------------------------------------------------
        43. வடவர்ச்சேர்ந்தவன் - பீடணன். 1. முங்குதல் - நிறைதல். 2. கௌவை -
ஒலி; வேலை - கடல். 3. அல்லது - கெட்டபொருள் 4. கடுத்தல் - மிகுதல். ஆழி -
கடல். 5. அமர்தல் - விரும்புதல்