6. பொருவள மின்றியே புகல டைந்தெனப் பெருவள மிக்கதன் பெயரின் மேம்படும் ஒருவள நாட்டினை யுண்டு வந்திடத் திருவுளங் கொண்டதத் தீய வாழியும். 7. அவ்வள நாட்டினும் அரிய தாகவே குவ்வளத் தமிழர்கள் கொண்டு போற்றிடும் இவ்வுல கத்திலா வினிமை மிக்கிடும் செவ்விய தமிழுணத் தேர்ந்த வக்கடல். 8. இனிமையி னுருவினள் இயற்கை வாழ்வினள் தனிமையி னுலவிடுந் தமிழத் தாயின்வாய்க் கனிமொழி யினிமையைக் கருத்துட் கேட்டுமே நனியுளங் களித்திட நயந்த வேலையும். 9. இனித்திடும் பொருளினை எவரும் உண்டிட மனத்திடை விரும்புதல் வழக்க மாதலான் தனித்தினித் திடும்பழந் தமிழை யுண்டிடக் கனைக்கடல் விரும்புதல் கடமை யல்லவோ. | அறுசீர் விருத்தம் | 10. தனித்தனி சொல்லி னின்பந் தளைபடத் தொடரி னின்பம் நுனிப்பொருள் காணி னின்பம் நுணுகியுண் ணோக்கி னின்பம் நினைத்தொறு நெஞ்சுக் கின்பம் நேர்தனித் தமிழே நீதான் அனைத்துமே யின்ப மானா லவாவுறார் யார்தான் சொல்லாய். 11. கேட்டிடிற் காதுக் கின்பம் கிளந்திடின் நாவுக் கின்பம் ஊட்டிடி னுளத்துக் கின்பம் உணர்ந்திடி னுணர்வுக் கின்பம் பாட்டுரை நடையிற் செல்லும் பழந்தமிழ்ப் பாவாய் நீதான் வீட்டிலா வின்ப மானால் விரும்பிடார் யார்தான் சொல்லாய். 12. அஎன வாயங் காக்கின் அன்னையுன் புலனா றைந்தும் முக்கனி தேன்பால் கண்டும் முகஞ்சுழித் தினைந்தே யொல்கப் புக்கெழீ யியல்பா யின்பம் புல்குசெந் தமிழ்நீ யானால் அக்கறை யொடுநின் நச்சார் யாரினி தறைவா யம்மா. ------------------------------------------------------------------------------------------ 7. குவை வளம் - குவ்வளம்; தொகுத்தல். குவை - மிக்க. 8. வேலை - கடல். 11. வீட்டி லா - நீக்க முடியாத. | |
|
|